தமிழக எல்லை நகரமான ஓசூர் வட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பேகேப்பள்ளி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சிறப்புக் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் - 1 பகுதியில் ஜுஜுவாடி அருகே அமைந்துள்ள பேகேப்பள்ளி கிராமத்தில் கடந்த 18-ம் தேதி முதல் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு ஊருக்குள் யாரும் வந்து செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும் கிராமத்தில் தினமும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக கிருமிநாசினி தெளிப்பு மற்றும் மருத்துவக் குழுவினர் மூலமாக வீடு வீடாகச் சென்று பரிசோதனை மற்றும் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் இந்த கிராமத்தில் கரோனா வைரஸ் தடுப்பு சிறப்புக் கண்காணிப்புக் குழு அலுவலர்களான டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார், காவல்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத் தலைவர் எம்.என்.மஞ்சுநாதா ஆகியோர் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பேகேப்பள்ளி கிராம ஊராட்சியில் உள்ள 7 குடியிருப்புப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கிருமிநாசினி தெளிப்புப் பணிகள் மற்றும் மருத்துவக் குழுவினரால் வீடுகள்தோறும் மக்களிடையே நடத்தப்பட்டு வரும் உடல் பரிசோதனை மற்றும் கணக்கெடுப்புப் பணிகள் உள்ளிட்ட கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு அங்குள்ள அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவிடம் ஆலோசனைகள் வழங்கினர். இந்த ஆய்வுப் பணியின்போது ஓசூர் கோட்டாட்சியர் குமரேசன், டிஎஸ்பி சங்கு, வட்டாட்சியர் வெங்கடேசன், வட்டார மருத்துவ அலுவலர் சுகன்யா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.