கேரளாவில் இருந்து கன்டெய்னர் லாரியில் வந்த வட மாநிலத் தொழிலாளர்களை பரமத்தி வேலுார் போலீஸார் மீட்டு விசாரணை நடத்தினர். 
தமிழகம்

கன்டெய்னர் லாரியில் வந்த வடமாநில தொழிலாளர்கள் மீட்பு

செய்திப்பிரிவு

கேரள மாநிலத்தில் இருந்து கன்டெய்னர் லாரியில் வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 26 பேரை பரமத்தி வேலூர் போலீஸார் மீட்டு, கரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடி வழியாக நேற்று காலை கரூரில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரியை போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது கன்டெய்னர் லாரியில் வடமாநில இளைஞர்கள் 26 பேர் இருந்தனர்.

இதுகுறித்து பரமத்திவேலூர் டிஎஸ்பி பழனிசாமி விசாரணை நடத்தினார். விசாரணையில், அரியானாவைச் சேர்ந்த 26 இளைஞர்களை கடந்த இரு மாதங்களுக்கு முன் ஏஜென்ட் ஒருவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துள்ளார்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையிழந்த தொழிலாளர்கள் அரியானாவுக்கு தேனி, திண்டுக்கல், கரூர் வழியாக நடந்து வந்துள்ளனர்.

அப்போது அரியானா பதிவு எண் கொண்ட கார்களை ஏற்றிச்செல்லும் கன்டெய்னர் லாரி நிற்பதைக் கண்டு தங்களது நிலைமையை விளக்கிக் கூறியுள்ளனர். இதையடுத்து, லாரி ஓட்டுநர் 26 பேரையும் அழைத்து வந்தது தெரிந்தது. தொடர்ந்து 26 பேரும் கரோனா தொற்று பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT