நாம் ஒன்றிணைந்து விழிப்புடன் செயல்பட்டால் கரோனா வைரஸ் நோய் தொற்றின்றி வாழ முடியும் என்று காமராசர் பல்கலை. துணைவேந்தர் நம்பிக்கை தெரிவித்தார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரி, எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை இணைந்து மாணவர்கள், ஆசிரியர்களுக்கான கரோனா வைரஸ் நோய் குறித்த சமூக உளவியல் விழிப்புணர்வு முகாமை அமெரிக்கன் கல்லூரியில் நடத்தியது.
முதல்வர் ம.தவமணி கிறிஸ்டோபர் வரவேற்றார். மருத்துவப்பணியில் ஈடுபட்டு தங்களது இன்னுயிரை நீத்த மருத்துவர்கள், காவலர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் சி.ஆர். சுப்பிரமணியம் பேசியது: வரலாற்றின் மிகப்பெரிய பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். பிற தொற்றுகளை விட கரோனா கொடியது.
தனி நபரை மட்டுமின்றி குடும்பம், சமூகத்தினரை பாதிக்கிறது. எப்போது முடியும், என்ன மருத்துவம் எனத் தெரியாமல் மன அழுத்தத்தில் உள்ளோம்.
விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற நான் தனி ஆள் இல்லை என்ற மன தைரியம் எனக்கு உந்து சக்தி யாக அமைகிறது. மாணவர்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் கரோனாவை வெற்றி கொள்ள முடியும், என்றார்.
மருத்துவக்கல்லூரி டீன் சங்குமணி பேசும்போது, ‘‘ கரோனா நோய் தடுக்கக்கூடியது. விழிப்புணர்வின் மூலம் குணப்படுத்த முடியும். இனி வரும் காலங்கள் மிக முக்கியமானது. வரும் 20 நாட்கள் சமூக விழிப்புணர்வோடு இருந்தால் நோய் தொற்றை அறவே ஒழிக்க லாம்,’’ என்றார்.
காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன் பேசுகையில், ‘‘ கண்ணுக்குத்தெரியாத வைரஸை எதிர்த்து போராடும் கட்டாயத்தில் இருக்கிறோம்.பயப்படத் தேவையில்லை. எதிர்கொள்ளும் சக்தி நம்மிடம் உண்டு.
இந்த வைரஸ் பாதிப்பு இன்றைக்கு சமூக சமத்துவத்துவத்தையும், மனித நேயத்தையும் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. நாம் ஒன்றிணைந்து விழிப்புடன் செயல்பட்டால் நோய் தொற்றின்றி வாழ முடியும்,’’ என்றார்.
காமராசர் பல்கலை பேராசிரியர்கள் கண்ணன், ஜெனிபா பயிற்சி அளித்தனர்.