கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் ஆரப்பள்ளம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்குத் தானே உணவு சமைத்துப் பரிமாறியதுடன் அவர்களுக்கான நிவாரணப் பொருட்களையும் வழங்கியிருக்கிறார் ஊராட்சி மன்றத் தலைவி வனிதா முருகானந்தம்.
கரோனா பரவலைத் தடுக்க நாடெங்கும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்குப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தும், மாலை மரியாதை செய்தும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் ஆரப்பள்ளம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களைச் சிறப்பிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
ஆரப்பள்ளம் ஊராட்சி மன்றத் தலைவர் வனிதா முருகானந்தம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயப்பிரகாஷ் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினார். அத்துடன் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அரிசி, மளிகை, காய்கனி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான முகக் கவசம், கையுறைகள், கிருமிநாசினி ஆகியவற்றை ஒன்றியத் துணை பெரும் தலைவர் பானுசேகர் வழங்கினார். பின்னர், தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணி விருந்தும் அளிக்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் வனிதா முருகானந்தம் தூய்மைப் பணியாளர்களுக்கு தனது கையால் அசைவ விருந்து சமைத்து அதை அவரே அனைவருக்கும் பரிமாறினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையர்கள் சரவணன், இளங்கோவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனகர், பணி மேற்பார்வையாளர் திருச்செல்வம், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் இளைய ராணி நீலகண்டன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.