தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் ரூ.500-க்கு 19 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதற்கான தொடக்க நிகழ்ச்சி கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
மேலும், மாவட்ட சைல்டு ஹெல்ப் லைன் மூலம் பாதிப்புக்குள்ளான 65 குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் 150 பேருக்கு அரிசி, காய்கறி தொகுப்புகளை வழங்கினார். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் மணிகண்டன், பாஸ்கரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் அனிதா, நகராட்சி ஆணையாளர் ராஜாராம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஆகியோர் சென்று விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 8 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் பசுவந்தனையை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர் வடமாநிலங்களில் உள்ள புனித ஸ்தங்களுக்கு சென்று வந்தவர்.
அவருடன் தொடர்பில் இருந்த 93 பேருக்கு பாதிப்பு எதுவும் இல்லை என ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை முடிவு வந்துள்ளது. மேலும், சிலருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பரவல் இல்லாத நிலை உள்ளது. தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு உரிய விதிமுறைகளின்படி, சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள 600 ரேபிட் கிட் வழங்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து தமிழக முதல்வர் மத்திய அரசின் கவனத்துக்கு நிச்சயம் எடுத்துச்செல்வார், என்றார் அவர்.