பொது மருத்துவத்திற்கு சிகிச்சை அளிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் நகரில் கரோனா வைரஸ் தொற்றால் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்காக பலர் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் நிலை உள்ளது. கடந்த ஒரு வாரமாக கரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் கமூடப்பட்டு, சிகிச்சை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் அண்ணாதுரையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனைகள் திறக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால், உத்தரவுகளையும் மீறி பல மருத்துவமனைகள் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து வழக்கறிஞர் மன்னப்பன் நேற்று ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில் தனியார் மருத்துவமனைகள் உடனே திறக்கப்படாவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 'இந்து தமிழ்' வாசகர் சரவணன் என்பவர் சுகாதாரத்துறை இணை இயக்குநர் சண்முககனியிடம் பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் கிடைத்தது.
அதில் சண்முககனி கூறியதாவது:
"விழுப்புரத்தில் அனைத்து வசதிகளும் உடைய 3 மருத்துவமனைகள் கடந்த வாரம் வரை அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில், ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனால் அங்கு பொது மருத்துவத்திற்கான நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை. நகரில் உள்ள மற்ற மருத்துவமனைகளைத் திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால், திறக்கப்படாத மருத்துவனைகளுக்கான அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திறக்கப்படாத மருத்துவமனைகள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நகராட்சி மருத்துவமனைகளில் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது".
இவ்வாறு சண்முககனி தெரிவித்தார்.