தமிழகம்

தென்காசியில் இனி அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வெளியே செல்லலாம்

த.அசோக் குமார்

தென்காசி நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வெளியே வர அனுமதி அட்டை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் தொற்று தடுப்புநடவடிக்கைகள் தென்காசி நகராட்சிப் பகுதிகளில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பினும் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் வருவதால் காய்கறி சந்தைகள், பலசரக்கு கடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் ஏற்படுகிறது.

இந்த நிலையை தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் வாரத்துக்கு 2 நாட்களில் மட்டும் வெளியில் வருவதற்கு அனுமதி அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிங்க் நிறத்திலான அட்டை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் வெளியில் வருவதற்கும், நீல நிற அட்டை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கும், இளம் பச்சை நிற அட்டை புதன் மற்றும் சனிக்கிழமைகளுக்கும் தயார் செய்யப்பட்டு உள்ளது. இன்று தென்காசி நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளுக்கு அனுமதி அட்டைகள் வழங்கப்படும்.

நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு அனுமதி அட்டையுடன் வீட்டுக்கு ஒருவர் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வரலாம். மருத்துவ அவசரத்துக்கு விலக்கு அளிக்கப்படும். தனிமனித இடைவெளியை கடைபிடித்து, அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்துதான் வெளியே வர வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிறுவனங்கள் பொதுமக்களிடம் உள்ள அடையாள அட்டையை சரிபார்த்து அந்த நாளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் விற்பனை செய்ய வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையடுத்து, அடையாள அட்டைகள் வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதால் இதுவரை 1015 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1312 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4173 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உயிர் காக்கும் மருந்துகனை வீட்டிலிருந்தே பெறலாம்:

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் உய்ய உயர் சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள் மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளைப் பெறுவதில் உள்ள இடையூறுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள் வீட்டின் அருகில் உள்ள மருந்துக் கடைகளில் கிடைக்காவிட்டால், தென்காசி மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறையை 04633 290458 என்ற தொலைபேசி எண் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1800121272 என்ற எண்ணில் தொடர்புகொண்டால், அந்த மருந்துகளை வீட்டிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தென்காசி சரக மாவட்ட மருந்துகள் ஆய்வாளரை 7305330947, மாவட்ட மருந்துகள் சங்கத் தலைவரை 9842009964 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT