தமிழகம்

எழுத்தாளர் பொன்னீலனுக்கு அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச் சென்ற ஆர்டிஓ: ஊரடங்கில் படைப்பாளிக்குக் கிடைத்த மரியாதை

என்.சுவாமிநாதன்

குமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 16 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களது ஊர்களும் தடுப்பு வேலிகள் அமைத்து மற்றவர்கள் உள்ளே செல்லவோ, ஊர் மக்கள் வெளியே வரவோ முடியாதபடி தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அப்படி தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஊர்களில் மணிக்கட்டிப் பொட்டல் கிராமும் ஒன்று. இது எழுத்தாளர் பொன்னீலனின் சொந்த ஊர்.

பொன்னீலன் முற்போக்கு இலக்கியத்தின் முகமாக இருப்பவர். தன் படைப்புகளிலும், தான் பேசும் மேடைகளிலும் தன் சொந்த ஊரான மணிக்கட்டிப் பொட்டல் குறித்தும், அங்கு வாழும் மனிதர்கள் குறித்தும் நிரம்பத் தகவல்களைச் சொல்வார். அவரது இரண்டு மகள்களும் திருமணம் முடிந்து வெளியூரில் இருக்கும் நிலையில், மணிக்கட்டிப் பொட்டலில் உள்ள தன் பூர்விக வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் கரோனா தொற்றுக்கு ஆளான குடும்பத்தினர் இருப்பதால் கிராமம் முற்றாக காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இதனால் வெளியில் இருந்து காய்கனி, மீன் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்பவர்களும் ஊருக்குள் வரமுடியவில்லை. இப்படியான சூழலில் பொன்னீலனோடு, கலை இலக்கியப் பெருமன்றத்தின் மூலம் நட்பில் இருந்த ஜவஹர் ஒருநாள் காய்கனிகள் கொண்டு சென்றார். ஆனால், அவரையும் ஊருக்குள் விடவில்லை. ஊர் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த அவரிடம் பொன்னீலனே நடந்துபோய் காய்கறிகள் வாங்கி வந்தார்.

பிறகு, வெளியூரிலிருந்து இப்படி அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வருவதற்கும் நோய்த்தொற்றின் தீவிரம் காரணமாக தடை செய்யப்பட்டது. 80 வயதைக் கடந்த பொன்னீலனுக்கு இது மிகுந்த சிக்கலை உருவாக்கியது. அந்தச் சிக்கலைத் தீர்க்கவும் அழகான ஒரு வழி பிறந்தது.

அதுகுறித்து நம்மிடம் பேசிய பொன்னீலன், “வீட்டைச் சுத்தி சுத்தி பலா மரங்கள் நிக்குது. சக்கையை (பலா) எடுத்தே குழம்பு, கூட்டுன்னு செஞ்சு சில நாள்கள் சமாளிச்சோம். ஒரு நாள் என்னோட இலக்கியத் தம்பி கென்னடிகிட்ட நிலைமையை யதார்த்தமா சொன்னேன். அவர் மூலமா இந்தத் தகவல் மாவட்ட வருவாய் அலுவலர் மயில் கவனத்துக்குப் போயிருக்கு. உடனே, இன்னிக்கு அந்தம்மாவே அவுங்க ஜீப்ல ஊரடங்கு முடியுற வரைக்கும் தேவையான காய்கனிகள், மளிகைச் சாமான்கள்... ஏன் டீத்தூள் வரை கொண்டு வந்துட்டாங்க. கரோனா அச்சம் இருக்குறதால வீட்டு வாசலில் எல்லாத்தையும் வைச்சுட்டு தூரமா நின்னு, ‘அய்யா... உங்களுக்குத் தேவையான பொருள்கள் எல்லாம் இருக்கு. வேற எதுவும் தேவைன்னாலும் தயங்காம கூப்பிடுங்க’ன்னு சொன்னாங்க.

இதுக்கு முந்தி சில இலக்கிய விழாக்களில் அவங்களைச் சந்திச்சுருக்கேன். இலக்கியப் பேச்சை ரசிச்சுக் கேட்பாங்க. வாசல் வரை வந்த அந்த அம்மாவுக்கு உள்ள கூப்பிட்டு ஒரு டீ போட்டு குடுக்க முடியல. எல்லாம் கரோனா அச்சம்தான். பொதுவா சாகித்ய அகாடமி விருது வாங்குன படைப்பாளிகளை கேரளம் கொண்டாடுறது வழக்கம்தான். அதேமாதிரி தமிழ்நாட்டிலும் தேடிவந்து வசதி செஞ்சதோட நலம் விசாரிச்சுட்டுப் போற அதிசயம் நடந்திருக்கு. கரோனா ஊரடங்குக்கு மத்தியில் இது ஒரு நல்ல தொடக்கம்” என்று நெகிழ்ந்தார் பொன்னீலன்.

SCROLL FOR NEXT