ஜி.கே.வாசன்: கோப்புப்படம் 
தமிழகம்

ஊரடங்கு: கிராமங்களில் பஞ்சாயத்து அமைப்பினர், ஊர்ப் பெரியவர்கள் ஒன்றுகூடி கட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும்; வாசன்

செய்திப்பிரிவு

கிராமங்களில் பஞ்சாயத்து அமைப்பினர், ஊர்ப் பெரியவர்கள் ஒன்றுகூடி கிராமக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.21) வெளியிட்ட அறிக்கையில், "கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தமிழகத்தில் பெருநகரம், நகரம், கிராமம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் அனைவரும் அரசின் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

கரோனாவின் தாக்கம் 2 ஆம் கட்ட ஊரடங்கு அறிவித்து அமலில் இருக்கும்போதும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனை நாளுக்கு நாள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் வாயிலாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் காவல்துறையின் கண்காணிப்பு அடிப்படையில் மக்கள் நடமாட்டம் ஊரடங்கு உத்தரவுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஊரடங்குக்கு கட்டுப்படாதவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வது, வண்டியை பறிமுதல் செய்வது உள்ளிட்ட தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், ஊராட்சிகளில், கிராமப்புறங்களில் இது போன்ற நிலை முழுமையாக இல்லை. மேலும், நகர்ப்புறங்களில் காவல்துறையினர் மேற்கொள்ளும் 24 மணிநேரப் பணி போல கிராமப்புறங்களில் எதிர்பார்க்க முடியாது.

குறிப்பாக, ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் முடிந்த பிறகும் அதாவது காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை என்றாலும் அதையும் தாண்டி இளைஞர்களும், மாணவர்களும், நடுத்தர வயதினரும் கிராமப்புறங்களில் இருசக்கர வாகனங்களில், சைக்கிளில் சுற்றி வருவதும், தோப்பு பகுதிகளில் ஒன்று கூடுவதும் நல்லதல்ல. இதனால் கிராமப்புறப்பகுதிகளில் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும்.

விவசாயம் சார்ந்த பணிகளைத் தவிர மற்ற தேவையற்ற பணிகளுக்கு செல்வதும், ஒன்றுகூடுவதும் தவிர்க்கப்பட வேண்டும். எனவே, ஊரடங்கு இன்னும் 12 நாட்கள் நடைமுறையில் இருக்கின்ற வேளையில் கிராமப்புறங்களை பொறுத்தமட்டில் ஊரடங்கை முழுமைப்படுத்த கிராமப்பஞ்சாயத்து அமைப்பினர், ஊர்ப் பெரியவர்கள் ஒன்றுகூடி கிராமக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இதன் அடிப்படையில் கிராமப்புறப் பகுதிகளில் கரோனா வைரஸ் பரவாமல் முன்னெச்சரிக்கையாக இருக்க கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த முடியும்.

எனவே, கிராமப் பஞ்சாயத்து அமைப்பினர், ஊராட்சி மன்றங்களும் அப்பகுதியில் உள்ள பெரியவர்களோடு இணைந்து ஊர்க் கட்டுப்பாட்டுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து கரோனா பரவலில் இருந்து ஊர் மக்களைப் பாதுகாக்கலாம்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT