ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும்போது, தமிழகத்தில் 4 லட்சம் லாரிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1,000 கோடி பராமரிப்புச் செலவை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் சென்னகேசவன் கூறியதாவது:
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீடித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 60 லட்சம் லாரிகளில் 15 சதவீதம் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள 4.50 லட்சம் லாரிகளில், அத்தியாவசிய சரக்கு போக்கு வரத்துக்காக 50 ஆயிரம் லாரிகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி வீதம் ஒரு மாதத்துக்கு ரூ.90 கோடி வருவாய் இழப்பை லாரி உரிமையாளர்கள் சந்தித்துள் ளனர்.
பராமரிப்புக்கு ரூ.1000 கோடி
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளை இயக்கி, பராமரிப்பு செய்தால் மட்டுமே பழுதாகாமல் இருக்கும். தற்போது, ஒரு மாதமாக லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், பேட்டரி குறைந்தும், இன்ஜின் ‘ட்ரையாகி’ பராமரிப்பு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப் பட்டுள்ளனர்.
ஒரு லாரிக்கு பேட்டரி, இன்ஜின் பராமரிப்புக்கு ரூ.25 ஆயிரம் உரிமையாளர்கள் செலவிட்டால் மட்டுமே, ஊரடங்கு முடிந்ததும் லாரிகளை மீண்டும் இயக்க முடியும். மாநிலம் முழுவதும் 4 லட்சம் லாரிகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1000 கோடி பராமரிப்பு செலவை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு லாரி உரிமையாளர்கள் உள்ளாகி யுள்ளனர். சுங்கச் சாவடி கட்டண உயர்வால் லாரி உரிமையாளர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, 6 மாதங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.