தமிழகம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை; 142 வழக்குகள் பதிவு: இது தொடக்கம்தான் என கிரண்பேடி எச்சரிக்கை

செ.ஞானபிரகாஷ்

கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பாக 142 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தொடக்கம்தான் என்று கிரண்பேடி எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாகவும், அவை ஏராளமான விலைக்கு விற்கப்படுவதாக அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர் அன்பழகன் புகார் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இவ்விஷயத்தில் டிஜிபி, தலைமைச்செயலர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து கள்ளச்சந்தை மதுவிற்பனை தடுப்பில் போலீஸார் வேகம் காட்டத்தொடங்கினர். இதையடுத்து தாசில்தார், போலீஸார் உட்பட 8 பேர் கைதாகியுள்ளனர். ஊரடங்கு பிறப்பித்தது முதல் இதுவரை 142 வழக்குகள் சட்டவிரோத மது விற்பனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் தவிர்த்து நூற்றுக்கணக்கானோர் கைதாகியுள்ளனர்.

சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் பதிவு:

''கரோனோ ஊரடங்கின்போது சில போலீஸ் அதிகாரிகள் மற்றும் சில கலால் அதிகாரிகள் இணக்கமாக பணம் சம்பாதிக்க பல மதுபான உரிமையாளர்களுடன் இணைந்து கள்ளச்சந்தையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்க உதவியுள்ளனர். எம்எல்ஏவிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கியது. குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிட்டன. சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான புகார்கள் அனைத்திலும் வழக்குப் பதிவாகிறது.

பொய்ப் புகாராக இருந்தாலும் அது பதிவாகும். இவ்விஷயத்தில் போலீஸார் மற்றும் கலால்துறையிலுள்ள சிலரின் கவனக்குறைவும் உறுதியானது.
கள்ள மது சந்தை தொடர்பான விஷயங்களில் காவல்நிலையங்களில் பணிபுரியும் சந்தேகத்துக்குரியோரை டிஜிபி அகற்றுவார். சட்டரீதியாக இவ்வழக்குகளை பதிவு செய்துள்ளதைப் பொறுத்து இந்நடவடிக்கை இருக்கும்.

வருவாய்த்துறை செயலரின் விரிவான அறிக்கைக்காக ராஜ்நிவாஸ் காத்துள்ளது. இது ஒரு ஆரம்பம்தான். தவறு இழைத்தோர் சட்டப்பூர்வமான முறையிலும் சான்றுகளின் அடிப்படையிலும் உரிமங்கள் ரத்தாகும்''.

இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT