கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க விடாமல் நடந்த நிகழ்வு இனி நடக்காமல் இருக்க, அரசு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பேரிடர் காலத்தில் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி மனிதாபிமானம் பேணிட வேண்டும், என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவர் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரோனா நோய்த்தொற்று எதிர்ப்புப் போரில் முன் படைவரிசை வீரர்கள் எனப் போற்றப்படும் மருத்துவர்கள் மரணத்துக்கு மரியாதை தராமல் இதுபோன்ற விழிப்புணர்வு இல்லாத செயலில் ஈடுபடும் சிலரால் மனிதாபிமானம் சிதைக்கப்படுவதாகத் தலைவர்கள் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களுக்கும், அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்:
“கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் உடலை மயானத்திற்குக் கொண்டு சென்றபோது அந்த வாகனத்தைப் பொதுமக்கள் மறித்துத் தாக்கி எதிர்ப்பு தெரிவித்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. நோய்த் தொற்று குறித்த மக்களுக்கு உள்ள குழப்பமும் அச்சமுமே இத்தகைய மோசமான சூழலை உருவாக்குகிறது.
இதனைத் தவிர்க்கும் வகையில், கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் உடலை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்வதற்கும், பொதுமக்கள் இறக்க நேரிட்டால் அவர்களின் உடலை காவல்துறையின் உரிய பாதுகாப்புடன் இறுதிச் சடங்கு செய்வதற்கும் அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும்.
பேரிடர் காலத்தில் பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தைத் தவிர்த்து, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி மனிதாபிமானம் பேணிட வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.