தமிழகம்

தமிழகம் முழுவதும் சுகாதார ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களால் பணிகளில் தொய்வு: நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை

எஸ்.கோமதி விநாயகம்

தமிழகம் முழுவதும் சுகாதார ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்களால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, நிரந்தர பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் சுகாதார ஆய்வாளர்களின் முக்கிய பணி கிராமங்களில் தொற்று ஏற்படாமல் தடுப்பது. அவ்வாறு ஏற்பட்டால் அதனை பரவவிடாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது.

ஒரு துணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் இருக்க வேண்டும். அதாவது 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒருவர் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். தற்போது 3 துணை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒரு சுகாதார ஆய்வாளரே பணியில் உள்ளார்.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு பணியில் சுகாதார ஆய்வாளர்கள் பணி இன்றியமையாததாக உள்ளது. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் குறித்து அறிந்து, அவர்களை நேரில் சென்று சந்தித்து, இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருக்கிறதா என கேட்டு, அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி தேவையான வசதிகளை செய்து தருவது மட்டுமின்றி தினமும் அவர்களை நேரில் தொடர்பு கொண்டு கண்காணித்து வருகின்றனர்.

ஆனால், போதுமான அளவு சுகாதார ஆய்வாளர்கள் இல்லாததால் ஒருவரே பல இடங்களை பார்ப்பதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுகாதார ஆய்வாளர்கள் சிலர் கூறும்போது, தமிழகத்தில் சுகாதார பணியாளர்கள் சுமார் 8000 பேர் வரை இருக்க வேண்டும்.

ஆனால், தற்போது 2225 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் 2006-ம் ஆண்டு சிக்குன் குனியா நோய் தொற்று வந்தபோது, 600 பேர் நியமிக்கப்பட்டனர். கடைசியாக 2014-ல் 600 பேர் சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக பணி நியமனம் என்பதே இல்லை.

தற்போது, தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை வீடுகளுக்கு நாங்கள் தான் முதலில் சென்று சந்திக்கிறோம். அவர்களுக்கு தொற்று இருந்ததால் அதன் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஆனால், அதற்கு முன்பே அவர்களுடன் நாங்கள் தான் தொடர்பில் இருப்போம். எங்களுக்கு ஊக்கத்தொகையோ, காப்பீடோ இல்லை.

மேலும், சுகாதார ஆய்வாளர்கள் காலிப்பணியிடம் இருப்பதால், அங்கன்வாடி ஊழியர்களைக் கொண்டு கரோனா தொற்று ஏற்பட்ட பகுதியில் அங்கன்வாடிப் பணியாளர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

இவர்கள் அங்கன்வாடியில் கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள். இவர்களை இப்பணியில் ஈடுபடுத்துவதால், நோய் தொற்று சமூக பரவலாக மாற வாய்ப்புள்ளது.

தற்போது, தற்காலிகமாக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளத்துக்கு வேறு எந்த பிரதிபலனும் இல்லாமல் அவர்களால் எப்படி பணியாற்ற முடியும்.

பணியின் போது அவர்களுக்கு தொற்று ஏற்பட்டு, உயிர் சேதம் உருவானால் அவர்களது குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாகிவிடும். எனவே, தற்போதுள்ள அவசர நிலையை கருத்தில் கொண்டு 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளரை நிரந்தர பணியாளராக நியமிக்க வேண்டும், என்றனர்.

SCROLL FOR NEXT