கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்தத் தொற்று வயது வித்தியாசமின்றி அனைவரையும் தொற்றுவதால், குழந்தைகள் முதல் முதியவர் வரை பாதிப்புக்குள்ளாகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 26 நபர்களில் 4 பேர் 2 முதல் 10 வயதுக்குட்பட்டோர்.
தொற்றுக்குள்ளான அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், சிறுவர்கள் குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பண்ருட்டியைச் சேர்ந்த ஒருவர் புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு வீடு திரும்பிய நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட முதற்கட்ட சோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் அவரது 40 வயது மனைவி மற்றும் 10 வயது மகனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தாயும் மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று பண்ருட்டியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 2 வயதுப் பெண் குழந்தைக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு, குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டார். இதேபோன்று 4 வயதுப் பெண் குழந்தையும், 6 வயது மற்றும் 10 வயது சிறுவர்களும் கரோனா தொற்றுடன் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகத்திடம் கேட்போது, ''குழந்தைகளாக இருப்பதால் அவர்களுடன் நோய்த்தொற்று இல்லாத அவர்களது தாயாரும் வார்டில் பராமரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர்க்க முடியாது. அவர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படுவதோடு நோய் எதிர்ப்புச் சக்தி உணவுகளும் வழங்கப்படுகின்றன.
தற்போது குழந்தைகள் வார்டில் தொலைக்காட்சி இருப்பதால் அதன் மூலம் அவர்கள் பொழுது போக்குகின்றனர். மேலும், பாதுகாப்பு கருதி அந்த வார்டை மேல் தளத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வேலைக்கு ஆட்கள் வர மறுக்கின்றனர். விரைவில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்'' என்றார்.
கடலூர் மாவட்டத்தில் 255 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.