இந்தியாவின் கடைசி டோல்கேட்டாக இருக்கும் நாங்குநேரி டோல்கேட்டில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனால் வேளாண் விளைபொருட்களை கொண்டு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 44 டோல்கேட் மையங்கள் செயல்படுகின்றன. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுழற்சி முறையில் சுங்க கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படும்.
இந்நிலையில் 24 டோல்கேட்டுகளில் வாகனங்களை பொருத்து கட்டணம் ரூ.5 முதல் ரூ. 25வரை நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கடைசி டோல்கேட்-ஆன நாங்குநேரியில் இந்த கட்டண வசூல் இன்று அதிகாலையிலிருந்து அமலுக்கு வந்தது.
நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வேளாண் விளைபொருட்கள் அதிகளவில் வாகனங்களில் எடுத்து செல்லப்படுகின்றன.
இப்பகுதியில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள், காய்கறிகள் அண்டை மாநிலமான கேரளா மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் சரக்கு வாகனங்களில் எடுத்து செல்லப்படுகின்றன.
இந்நிலையில் டோல்கேட் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது காய்கறிகள் மற்றும் வாழைத்தார்களை எடுத்து செல்லும் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே தாங்கள் விளைவித்த விளைபொருட்களுக்கு விலை கிடைக்காத நிலையில் அதிக வாடகையில் லாரிகளை அமர்த்தி அவற்றை ஏற்றி கொண்டு செல்லும்போது கூடுதலாக கட்டணம் வசூலிப்பது விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.