நாகை மாவட்டம் சீர்காழியில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலம் அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சீர்காழியின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் சிலருக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதி முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இந்நிலையில், அங்குள்ள மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த நிலம் அறக்கட்டளை தலைவரும், வழக்கறிஞருமான கிள்ளை ரவிந்திரன் அரிசி, மளிகை, மற்றும் காய்கனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இன்று நேரில் சென்று வழங்கினார். நகராட்சிப் பகுதி, கீழத்தெரு, பொன்னையன் தெரு, கதிர்வேல் தெரு, அய்யனார் கோவில் தெரு, கச்சேரி ரோடு ஆகிய பகுதிகளில் இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள ஓதவந்தான்குடி, திருநீலகண்டம் பகுதிகளில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அரிசி, மளிகை, காய்கனி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் நிலம் அறக்கட்டளையால் வழங்கப்பட்டன .