கோவில்பட்டி அருகே பசுவந்தனையில் பெண்ணுக்கு கரோனா தொற்று இருக்கலாம் என்ற தகவல் வெளியான நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த 129 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
பசுவந்தனையை சேர்ந்த 68 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு கரோனா தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி முதல் உறவினர்களுடன் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு 24-ம் தேதி தான் பசுவந்தனை திரும்பி இருந்தார்.
இந்நிலையில், சுகாதார துறை துணை இயக்குநர் அனிதா தலைமையிலான மருத்துவ குழுவினர் பசுவந்தனையில் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கிறதா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், நடமாடும் சோதனை வாகனம் மூலம் பசுவந்தனையை சேர்ந்த 129 பேரிடமிருந்து பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இந்த பணிகள் நாளையும் தொடரும் என கூறப்படுகிறது.
மேலும், ஓய்வு பெற்ற ஆசிரியை வசித்த தெரு மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டது. அதே போல், எப்போதும் வென்றான், கோவில்பட்டி, ஓசனூத்து, ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய சாலைகள் மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.