மதுரையில் வேலையின்றி கஷ்டப்பட்ட கட்டிடத் தொழிலாளர்களுக்கு கரிமேடு காவல்துறையினர் உணவுப்பொருட்களை வழங்கினர்.
ஊரடங்கையொட்டி மதுரை நகரில் அண்ணாநகர், மதிச்சியம், புதூர் பகுதியில் தினமும் கட்டிடப் பணி உட்பட பிற கூலி வேலைக்கு சென்று, வாழ்கையை நகர்த்தும் குடும்பத்தினருக்கு உதவும நோக்கில் ‘ஒரு காவலர், ஒரு குடும்பம் ’ தத்தெடுப்பு என்ற திட்டத்தை காவல் துறையினர் உருவாக்கினர்.
இதன்படி, தன்னார்வலர்கள் மூலம் சுமார் 300 குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான அரிசி உணவுப் பொருட்களை அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ் ஏற்பாட்டின் பேரில் வழங்கினர்.
இத்திட்டத்தை நகரிலுள்ள ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் விரிவுப்படுத்தலாம் என, காவல் ஆணையர் டேவிட்சன் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் கரிமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி யில் அன்றாடம் கட்டிட வேலைக்கு செல்லும், நூற்றுக்கணக்கா னோர் உணவுப் பொருட்களுக்கு சிரம்மப்படுவதாக தகவல் தெரிய வந்தது.
இதையடுத்து கரிமேடு காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் ஏற்பாட்டின் பேரில் முதல்கட்டமாக 38 குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது.
திலகர்திடல் உதவி காவல் ஆணையர் வேணுகோபால், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி, எஸ்ஐ சோலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆய்வாளர் சங்கர் கண்ணன் கூறுகையில், ‘‘ஆரப்பாளையம் பெத்தானியாபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் ஓரிடத்தில் கட்டிட தொழிலாளர்கள் கூடியிருந்தனர். விசாரித்த போது, யாராவது கட்டிட வேலை அழைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறோம்.
ஊரடங்கால் குடும்பத்தை நகர்த்த வேறு வழியில்லை எனத் தெரிவித்தனர்.
இதை கருத்தில் கொண்டு, 80 க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு உணவு பொருட்கள் வாங்கி வழங்க எங்களது காவல் நிலைய போலீசாருக்குள் நிதி திரட்டினோம். முதல்கட்டமாக 38 பேருக்கு உணவுப்பொருட்களை வழங்கினோம். எஞ்சிய 50 குடும்பத்தின ருக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்,’’ என்றார்.