பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

மதுக்கடை இருப்பு ஆய்வில் மதுபாட்டில்களை எடுத்துச் சென்றதாக தாசில்தார் உட்பட 4 பேர் கைது: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

செ.ஞானபிரகாஷ்

மதுக்கடைகளில் இருப்பு ஆய்வுக்குச் சென்றபோது மதுபாட்டில்களை எடுத்துச் சென்றதாக தாசில்தார் உட்பட அவரது குழுவில் இருந்த வருவாய் ஆய்வாளர், எழுத்தர், டிரைவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை மது விற்பனை தொடர்பான வழக்கை சரியாக நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 469 மதுபானக்கடைகள் மற்றும் 98 சாராயக்கடைகள் , கள்ளுக்கடைகள் உள்ளன. ஊரடங்கையொட்டி அனைத்து மதுபானக் கடைகள், குடோன்கள், வடிசாலைகள் மூடப்பட்டன. ஆனால் தொடர்ந்து மதுபான விற்பனை கள்ளச்சந்தையில் இருப்பதாக புகார்கள் வந்ததையடுத்து ஊரங்கு தொடங்கி 2 வாரத்துக்குப் பிறகுதான் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. எனினும் தொடர்ந்து மது விற்பனை நடந்ததாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இச்சூழலில் 24 கடைகளின் உரிமம் ரத்தாகியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் சட்டவிரோத மது விற்பனை ஏதும் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய மொத்த விற்பனை குடோன்கள், பார்கள், சில்லறை மதுபானக் கடைகளில் கையிருப்பை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மார்ச் 24-ம் தேதி வைத்திருந்த கையிருப்புடன் தற்போது உள்ள கையிருப்பை ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர். இதற்காக அதிகாரிகள் தலைமையில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து கள்ளச்சந்தை மது விற்பனை தொடர்பான புகார்கள் வருவதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புது முடிவு எடுத்தார்.
அதன்படி, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தால் அவ்விற்பனை நடந்த காவல்நிலைய அதிகாரி காணொலியில் விசாரிக்கப்படுவார். இவ்விசாரணையில் துணைநிலை ஆளுநர், டிஜிபி, ஜஜி, எஸ்எஸ்பி ஆகியோர் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார். கள்ளச்சந்தையில் மது விற்பனைக்குக் காரணம் போலீஸாரின் கவனக்குறைவுதான் என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற ஆனந்த்பாபுவை போலீஸார் நேற்று இரவு பிடித்து விசாரித்தனர். அவர், மடுகரை தனியார் மதுபானக்கடைக்கு தாசில்தார் கார்த்திகேயன் ஆய்வுக்குச் சென்றபோது அங்கிருந்த மதுபாட்டில்களை தனது தேவைக்கு எடுத்து கொண்டு எனக்கும் தந்தார். அதை விற்பனை செய்தேன் என்று தெரிவித்தார்.

அதையடுத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (எஸ்,எஸ்.பி) ராகுல் அல்வால் தலைமையிலான போலீஸார் நள்ளிரவே நிலஅளவைத் துறை தாசில்தார் கார்த்திகேயன் வீட்டுக்குச் சென்று அவரை பிடித்து விசாரித்தனர். அவர் வீட்டிலிருந்து மதுபானங்களைப் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில் ," தாசில்தார் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஊரடங்கு உத்தரவை மீறல், தொற்று நோயை பரப்புதல், பேரிடர் காலத்தில் அரசு உத்தரவை மீறல், கலால்துறை சட்டப்பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் மடுகரை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மதுக்கடை ஆய்வுக்கு அவருடன் சென்ற வருவாய் ஆய்வாளர் வரதன், எழுத்தர் சேதுராமன், டிரைவர் கருணாமூர்த்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கள்ளச்சந்தை மது விற்பனை தொடர்பான வழக்குகளை முறையாக பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத பாகூர் இன்ஸ்பெக்டர் அனில்குமார், வில்லியனூர் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், திருக்கனூர் உதவி ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் ஆயுதப்படைக்கு அதிகாலையில் மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பானோர் மீது நடவடிக்கை தொடரும்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT