தமிழகம்

கரோனாவால் உயரிழந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் அராஜகம் செய்த கும்பல் மீது நடவடிக்கை: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்

அ.அருள்தாசன்

சென்னையில் கரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் அராஜகம் செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட தலைவர் டாக்டர் முகமது ரபி வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாக்டர் சைமனின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுக்கப்பட்டதை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

நோயாளிக்கு சிகிச்சை அளித்தபோது கரோனா தொற்றுக்கு சைமன் ஆளாகியிருந்தார்.

அவரது உயிரிழப்பு அதிர்ச்சி அளிக்கும் அதேநேரத்தில் அவரது உடலை அடக்கம் செய்யவிடாமல் கும்பல் தடுத்து அராஜகத்தில் ஈடுபட்டது மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த கும்பல் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சிகிச்சை அளித்து காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது உடலை உரிய மரியாதையுடன் அடக்கம் அல்லது தகனம் செய்ய அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் பலவும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கரோனா தொற்று பிரச்சினையில் மிகப்பெரிய சுமை அரசு மருத்துவத்துறை மீது இருக்கிறது.

இச்சூழ்நிலையில் டாக்டர்களின் உடலை அடக்கம் செய்யவிடாமல் அராஜகத்தில் ஈடுபடுவது அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மத்தியில் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் குறைத்துவிடும் வாய்ப்புள்ளது.

எனவே கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள், தங்கும் வசதி, உணவுக்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT