தமிழகம்

கோடையில் வேகமாக வற்றும் நீர்நிலைகள்: விலங்குகள் தாகம் தணிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்

ஜோதி ரவிசுகுமார்

வனச்சரக காப்புக் காடுகளில் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் கோடை வெயிலின் காரணமாக வேகமாக வறண்டு வரும் நிலையில், வனவிலங்குகளின் தாகம் தணிக்க நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர் வனக்கோட்டத்தில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம், கிருஷ்ணகிரி, சூளகிரி, ஓசூர் உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இந்த வனச்சரக காப்புக்காடுகளில் யானை, சிறுத்தைப் புலி, காட்டு மாடு, புள்ளிமான், கரடி, முயல், காட்டுப் பன்றி, மயில் மற்றும் ஊர்வனங்கள் உள்ளிட்ட பல்வேறு வன உயிரிகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் கோடை காலத்தில் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் வனத்தில் உள்ள இயற்கையாக அமைந்த ஏரிகள் மற்றும் வனத்துறையால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள தொட்டிகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்புவது வனத்துறையின் வழக்கம். அந்தவகையில் வனவிலங்குளின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் பணியை ஆண்டுதோறும் கோடை காலத்தில் மாவட்ட வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அஞ்செட்டி வனச்சரகத்தில் உள்ள நீர்நிலைகளில் டிராக்டர் மூலமாக தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அஞ்செட்டி வனச்சரகர் ரவி கூறியதாவது:

''அஞ்செட்டி வனச்சரகத்தில் பனைக்காப்புக்காடு, நாட்றாம்பள்ளி காப்புக்காடு, உப்புராணி காப்புக்காடு, பிலிகுண்டலு காப்புக்காடு, ஒட்டப்பள்ளி காப்புக்காடு, அஞ்செட்டி காப்புக்காடு ஆகிய 6 காப்புக்காடுகள் உள்ளன. இந்த அனைத்து காப்புக்காடுகளிலும் வனத்துறையால் உருவாக்கப்பட்ட 14 தண்ணீர்த் தொட்டிகள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் அமைந்துள்ளன. நடப்பாண்டில் கோடையில் பெய்யும் வழக்கமான மழை குறைந்து வெயில் அதிகரித்துள்ளதால் வனத்தில் வறட்சி ஏற்பட்டு தற்போது 10க்கும் குறைவான ஏரிகளில் மட்டுமே தண்ணீர் உள்ளது.

ஆகவே, வனவிலங்குகளின் தண்ணீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு தண்ணீர்த் தொட்டிகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது. தண்ணீர் நிரப்பப்பட்ட பனை காப்புக்காட்டில் உள்ள ஏரி மற்றும் இதர நீர்நிலைகளை நாடி யானை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வரத் தொடங்கியுள்ளன. மாவட்ட வனத்துறை சார்பில் காப்புக்காடுகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் ஊற்றி முறையாகப் பராமரித்து வருவதால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி காப்புக்காட்டை விட்டு வெளியேறுவது தவிர்க்கப்படுகிறது.

இதனிடையே கரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும் பரவும் வாய்ப்புள்ளதால் வனத்தையும். வனவிலங்குகளையும் காப்பாற்றும் வகையில் வனத்தை ஒட்டி உள்ள கிராம மக்கள் காப்புக்காடுகளின் அருகே நடமாடுவதைத் தவிர்த்து வீடுகளிலேயே இருந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்களிடையே ஒலிப்பெருக்கி மூலமாக விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது''.

இவ்வாறு வனச்சரகர் ரவி கூறினார்.

SCROLL FOR NEXT