கொடைக்கானலில் தனியாக சமைத்து வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டு உணவு வழங்குவதால் பசியாறும் தெருநாய்கள். 
தமிழகம்

தெருநாய்களின் பசியாற்ற வீட்டிற்கு வெளியே மீதமான உணவுகளை வையுங்கள்: பொதுமக்களுக்கு விலங்கின ஆர்வலர்கள் வேண்டுகோள்

பி.டி.ரவிச்சந்திரன்

ஓட்டல் கழிவுகள், குப்பைகளில் உணவு தேடி பசியாறிய தெருநாய்களுக்கு தற்போது உணவு கிடைக்காத நிலையில், அவற்றின் பசியாற்ற மீதமான உணவுகளை வீட்டிற்கு வெளியே வையுங்கள், என விலங்கின ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு தொடரும் நிலையில் ஓட்டல்களில் இருந்து வெளியேறும் உணவுக் கழிவுகள், குப்பைத் தொட்டிகளில் இருக்கும் கழிவுகளை உண்டு வாழ்ந்துவந்த தெருநாய்கள் தற்போது ஓட்டல்கள் மூடப்பட்டதால் உணவிற்கு வழியின்றி தவித்துவருகின்றன. இவர்களுக்கு ஆங்காங்கே சில விலங்கின ஆர்வலர்கள் அவ்வப்போது உணவளித்து வருகின்றனர்.

இருந்தபோதும் அனைத்துப்பகுதி தெருநாய்களுக்கும் இதுபோன்று உணவளிப்பது என்பது சாத்தியமில்லாத நிலையில் பொதுமக்கள் தாங்களே தெருநாய்களுக்கு உணவளிக்க முன்வரவேண்டும் என்கின்றனர் விலங்கின ஆர்வலர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் மட்டும் 400 தெருநாய்கள் உள்ளன. இவை உணவின்றி தவித்து வந்த நிலையில், கொடைக்கானலை சேர்ந்த எஃபெக்ட் தொண்டு நிறுவனத் தலைவர் வீரபத்ரன் முயற்சியில் தினமும் தெருநாய்களுக்கு உணவளிக்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து எஃபெக்ட் தொண்டு நிறுவன தலைவர் வீரபத்ரன் கூறுகையில், ஊரடங்கால் தெருநாய்கள் பசியால் வாடுவதைத் தவிர்க்க நண்பர்கள் உதவியுடன் அவற்றிற்கு தனியாக சமைத்து வாகனத்தில் எடுத்துச்சென்று உணவு வழங்கிவருகிறோம்.

இந்த முயற்சிக்கு கொடைக்கானல் நகரை சேர்ந்த பலரும் உதவி செய்தனர். இது ஊரடங்கு முடியும் வரை தொடரும், என்றார்.

கோடை ஸ்மைல் அமைப்பின் அப்பாஸ் கூறுகையில், தங்கள் பகுதி தெருநாய்களை அந்தந்த பகுதி மக்களே கவனித்துக்கொள்ளும்வகையில், வீட்டுவாசல்களில் மீதமான உணவுகளை வைத்துவிட்டால் அப்பகுதி நாய்கள் உணவை உண்டு பசியாரும்.

இதனால் எங்களைப் போன்றவர்களின் உதவி தெருநாய்களுக்கு தேவைப்படாது. அந்தந்த பகுதி மக்களே தெருநாய்களின் பசியைப் போக்க முன்வரவேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக மக்களிடம் வைக்கிறோம், என்றார்.

SCROLL FOR NEXT