தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மேலாண்மை இயக்குனர் நியமனம் தொடர்பான உத்தரவு, பணியாளர்களின் 3 கட்ட போராட்ட அறிவிப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் துணைப் பதிவாளர்/ கூட்டுறவு சார்பதிவாளர் பணி நிலையில் அரசு ஊழியரை மேலாண்மை இயக்குனராக நியமிக்க மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஏப். 3-ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவால் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருக்கும் கூட்டுறவு சங்கங்கள் கூடுதல் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியது வரும். இதனால் மேலாண்மை இயக்குனர் தொடர்பான உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் தமிழகம் முழுவதும் 3 கட்ட போராட்டம் அறிவித்தது.
முதல் கட்டமாக இன்று (ஏப். 20) ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மேலாண்மை இயக்குனர் நியமிப்பது தொடர்பான ஏப். 3-ல் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.
இது குறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மதுரை மாவட்ட செயலர் ஆ.ம.ஆசிரியதேவன் கூறுகையில், எங்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று மேலாண்மை இயக்குனர் நியமனம் தொடர்பான உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.