பென்னாகரம் அருகே உள்ள கோட்டூர், ஏரிமலை, அலகட்டு ஆகிய மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால், நோயாளிகளை சிகிச்சைக்கு 8 கிமீ தூரம் தூக்கி வர வேண்டிய நிலை உள்ளது என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மலைக் கிராமங்கள் கோட்டூர், ஏரிமலை, அலகட்டு. இந்த கிராமங்களில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கன்சால்பேர், சீங்காடு அடிவாரம் ஆகிய இடங்களில் இருந்து மலை மீது சுமார் 8 கிமீ சென்றால்தான் இந்த கிராமங்களை அடைய முடியும். மூன்று மலைக் கிராமங்களில் இருந்து அடிவாரத்துக்கு வர சாலை வசதி இல்லை. கிராம மக்கள் நோய்வாய்ப்படும்போதும், கர்ப்பிணிகளையும் டோலி கட்டி மலை மீதிருந்து அடிவாரம் வரை தூக்கி வந்து, அங்கிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள பாலக்கோட்டுக்கு வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், தங்களது மலைக் கிராமங்களுக்கு சாலை அமைத்துத் தந்தால், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வசதியாக இருக்கும் என்கின்றனர் மலைக் கிராம மக்கள்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி திமுக எம்எல்ஏ இன்பசேகரன் நேற்று கோட்டூர், ஏரிமலை, அலகட்டு கிராம மக்களுக்கு கட்சி சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்றார்.
வாகனம் தந்து உதவிய எம்எல்ஏ
அப்போது, பூச்சி மருந்து குடித்து உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த ஏரிமலையில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை தோளில் சுமந்தபடி மலையில் இருந்து கிராம மக்கள் இறங்கி வந்து கொண்டிருந்தனர்.
எம்எல்ஏ உடனடியாக தனது வாகனத்தைக் கொடுத்து அந்தப் பெண்ணை பாலக்கோடு அரசு மருத் துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவினார்.