தமிழகம்

3 மாதங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: லாரி உரிமையாளர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

அடுத்த 3 மாதங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா பாதிப்பு தீவிரமானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடெங்கும் சுங்கச்சாவடிகள் இயங்காமல் இருந்தன.

இந்நிலையில் நாடுமுழுவதும் தேசியநெடுஞ் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று (20-ம் தேதி) முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு, லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.யுவராஜிடம் கேட்டபோது, “ஊரடங்கால் லாரி தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.

இதனால், லாரி உரிமையாளர்களும், இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக் கணக்கானோரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு முற்றிலும் முடியாத நிலையில் சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் வசூலிப்பது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அடுத்த 3 மாதங்களுக்கு சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்குஅளிக்க வேண்டும். சுங்கச்சாவடிகளை டெண்டர் எடுத்துள்ள நிறுவனங்கள், ஒப்பந்த முடிவு காலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துக் கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்கலாம்" என்றார்.

SCROLL FOR NEXT