கரோனா வைரஸை அழிக்கும் திறன்கொண்ட கிருமிநாசினியை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இதை பயன்பாட் டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பல்கலை. துணைவேந்தர் சுரப்பா வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸை அழிக்கும்திறன்கொண்ட புதிய கிருமிநாசினியை அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுதொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நேற்று சந்தித்த சுரப்பா, ‘‘அண்ணாபல்கலை. கண்டுபிடித்த கிருமி நாசினியை தமிழகம் முழுவதும் பயன்படுத்த வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கு, இதுகுறித்து அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிருமிநாசினி குறித்து அண்ணா பல்கலை.யின் சுகாதாரக் கருவி மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் (என்எச்எச்ஐடி) ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே.சங்கரன் கூறியதாவது:
ஏயு சானிடைசர்
கரோனா வைரஸை அழிக்கும் முதல் கிருமிநாசினியை உலகில் முதன்முறையாக தற்போது அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. பல்கலை. ஆராய்ச்சி மாணவர் வி.லஷ்மண்தலைமையில் ‘ஏயு சானிடைசர்’ என்ற கிருமிநாசினி உருவாக்கப் பட்டுள்ளது.
வழக்கமான கிருமிநாசினி வைரஸின் புரத அணுவை மட்டுமே சிதைக்கும். நோய் காரணியை அழிக்காது. இதனால், வைரஸ் தொடர்ந்து பரவும். ஆனால், நாங்கள் உருவாக்கிய கிருமிநாசினி வைரஸ் நோய் காரணி யுடன் சேர்ந்து புரத அணுவையும் முற்றிலுமாக அழிக்கும். இதுகரோனா வைரஸின் மரபணுசோதனை மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கான காப்புரிமை பெறுவதற்கு அரசு மூலம் முயற்சி செய்து வருகிறோம்.
இந்தக் கிருமிநாசினியை வழக்கமாக பயன்படுத்தும் சோப்பு மற்றும் இதர கிருமிநாசினியுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். மேலும் கைகள், உடல் பகுதிகள், முகக் கவசம், கையுறைகள், மருத் துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்திலும் பயன்படுத்தலாம்.
இதைத் தொடர்ந்து கரோனா வைரஸ் தொடர்பாக பலமுறை பயன்படுத்தும் சுவாச முகமூடி குறித்த ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.