தமிழகம்

கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்துக்கு நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு: விவசாயிகள் தற்கொலை முயற்சி; போலீஸ் குவிப்பு

செய்திப்பிரிவு

கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத் திட்டப் பணிக்காக, நிலங்களை கையகப் படுத்த முயன்ற அதிகாரிகளை தடுத்து விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 2 விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகருக்கு குடிநீர் விநியோகிக்கவும், கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீரை தேக்கி வைக்கவும், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள கண்ணன்கோட்டை, தேர்வாய் ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கம் அமைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, கண்ணன் கோட்டை, தேர்வாய், கரடிப்புத்தூர் பகுதிகளில் 1252.47 ஏக்கர் பரப்பளவில், 330 கோடி ரூபாய் செலவில் இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ளது.

இந்த நீர்த்தேக்கத்துக்காக அரசு புறம்போக்கு நிலம், வனத்துறை மற்றும் விவசாயிகளின் பட்டா நிலம் ஆகியவற்றை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, அரசு மற்றும் வனத்துறை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.

நீர்த்தேக்கத்துக்காக கையகப் படுத்த முடிவு செய்யப்பட்ட 800.65 ஏக்கர் விவசாய நிலங்களின் உரிமையாளர்களில் ஒரு பகுதியினர் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளனர். மற்றொரு பகுதியினருக்கான இடைக்கால நிவாரணம், பல்வேறு காரணங்களால், வருவாய்த் துறை வசம் மற்றும் சிவில் கோர்ட் டெபாசிட்டில் உள்ளது. சிவில் கோர்ட் டெபாசிட்டில் உள்ள 250 ஏக்கருக்கும் மேலான நிலங்களின் உரிமையாளர்களுக்கு, இடைக்கால நிவாரணத்தை, லோக் அதாலத் சிறப்பு நீதிமன்ற முகாம் நடத்தி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதே நேரத்தில், விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக, விவசாயிகள் 25 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்த பொன்னேரி கோட்டாட்சியர் நாராயணன் உள்ளிட்ட வருவாய் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேற்று கண்ணன்கோட்டைக்கு வந்தனர். வாஜ்ரா வாகனம் மற்றும் பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றுடன் 50-க்கும் மேற்பட்ட போலீஸாரும் வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது குழந்தைகளும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது நாகலிங்கம் (40) என்ற விவசாயி தீக்குளிக்க முயன்றார். இடைக்கால நிவாரணம் பெற, ஆவணங்களில் உள்ள குறைபாடுகளை களைய வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக அவர் குற்றம்சாட்டினார். அதே போல், சுரேஷ் (45) என்ற விவசாயி மின்கம்பம் ஒன்றில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். பொதுமக்கள் மற்றும் போலீஸார் தற்கொலைக்கு முயன்ற இருவரையும் தடுத்து நிறுத்தினர்.

இந்த போராட்டம் 4 மணி நேரம் நீடித்தது. இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள், உயர்நீ திமன்றத்தில் வரும் 27-ம் தேதி நடக்க உள்ள வழக்கு விசாரணைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகளும், அதிகாரிகளும் கலைந்து சென்றனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க கண்ணன்கோட்டை பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT