திருமங்கலம் பகுதியில் வீடு, வீடாகச் சென்று இலவச உணவுப்பொருட்கள் தொகுப்பை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். 
தமிழகம்

ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்கிறார்; முதல்வர் சிறப்பாகச் செயல்படுகிறார்: அமைச்சர் உதயகுமார் 

என்.சன்னாசி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்கிறார். அதுவும், இந்த நேரத்தில் அவர் எதிரான கருத்துகளைக் கூறுகிறார் என்று அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கூறினார்.

மேலும், முதல்வரின் வழிகாட்டுதலின்படி, ஒருலட்சம் குடும்பங்களுக்கு இலவச உணவுப்பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் என்றார்.

கரோனா தடுப்புக்கான ஊரடங்கையொட்டி மதுரை திருமங்கலம் பகுதியில் இன்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினரை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் நேரில் சந்தித்து, சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் அவர்களுக்கு தேவையான 5 கிலோ காய்கறி இலவசத் தொகுப்புகளை வழங்கினார்.

இதன்பின், அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தமிழக முதல்வர் இத்தடைக் காலத்திலும் அனைத்து மக்களுக்கும் உணவு, பாதுகாப்பினை வழங்கியுள்ளார். ஏற்கெனவே 2 கோடியே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை, அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை வழங்கினார். தற்போது இந்த மாதத்திற்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரையை விலையின்றி வழங்க அரசாணை பிறப்பித்துள்ளார்.

தற்பொழுது முதல்வரின் வழிகாட்டுதலின்படி, ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 5 கிலோ கொண்ட காய்கறித் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, தினந்தோறும் 10 ஆயிரம் குடும்பங்கள் வீதம் அவர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்கப்படும். திருமங்கலம் பகுதியில் வீடு, வீடாக சென்று 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கினேன். மக்களிடம் இதற்கான வரவேற்பைப் பொறுத்து மேலும் விரிவுபடுத்தப்படும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்கிறார். அதுவும் இந்த நேரத்தில் அவர் எதிரான கருத்துகளைக் கூறுகிறார். வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் முதல்வர் சிறப்பாகச் செயல்படுகிறார். அதை மக்களும் பாராட்டுகின்றனர். இதை ஏற்க முடியாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முக.ஸ்டாலின் அடுக்குகிறார்.

வைரஸ் சோதனைக்கான கருவிகள் எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடக் கூறிவிட்டார் மூத்த ஐஏஎஸ் அதிகாரி. ஆனாலும், மு.க.ஸ்டாலின் அரசியலுக்காக குற்றம் சாட்டுகிறார். வைரஸைக் கண்டறியும் கருவிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. அதன் மூலம் மதுரை மாவட்டத்தில் கூட காவலர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. ஒருவருக்கும் தொற்று இல்லை என்பது மிகுந்த மகிழ்ச்சி.

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, முதல்வரும், பல்வேறு வல்லுநர்களும் கலந்து ஆலோசித்தனர். 20-ம் தேதிக்குப் பிறகு என்ன விதமான தளர்வுகளை மேற்கொள்ளலாம் என்பதை முதல்வர் முடி வெடுப்பார். 144 தடை உத்தரவு மே 3-ம் தேதி வரை நீடிக்கும். நேரக் கட்டுப்பாடு என்பது மே 3 வரை அமலில் இருக்கும். எந்தவித தளர்வும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை''.

இவ்வாறு அமைச்சர் உதயகுமார் பேசினார்.

SCROLL FOR NEXT