முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி | கோப்புப் படம். 
தமிழகம்

பிரதமர் மோடி - முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் பேச்சு: தமிழகத்துக்கு கூடுதல் ரேபிட் பரிசோதனைக் கருவிகள் வழங்கக் கோரிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்துக்கு அதிகமாக ரேபிட் பரிசோதனைக் கருவிகள வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் பேசும்போது கோரிக்கை வைத்தார்.

கரோனா வைரஸின் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனாவுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்ய தற்போது பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்குத் தேவையான பரிசோதனைக் கருவிகள் சீனா, சிங்கப்பூர், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் 17 அரசு மருத்துவமனைகள், 10 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. பிசிஆர் கருவி மூலம் செய்யப்படும் இந்தப் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு 6 மணிநேரத்தில் இருந்து 2 நாட்கள் வரை ஆகிறது.

ரேபிட் பரிசோதனைக் கருவி மூலம் 30 நிமிடங்களில் முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும். இதையடுத்து, ரேபிட் கிட் மூலம் பரிசோதனைகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக சீனாவில் இருந்து தமிழக அரசு முதற்கட்டமாக 24 ஆயிரம் ரேபிட் பரிசோதனைக் கருவிகளை வாங்கியது. மத்திய அரசும் 12 ஆயிரம் துரிதப் பரிசோதனைக் கருவிகளை (ரேபிட் கிட்) தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.

முதல்கட்டமாக, சீனாவில் இருந்து 24 ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவிகள் நேற்று முன்தினம் சென்னை வந்தன. இந்தக் கருவிகளை மருந்து கிடங்குக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள், இரவோடு இரவாக தமிழகம் முழுவதும் 17 அரசு மருத்துவமனைகளுக்குப் பிரித்து அனுப்பினர்.

இந்நிலையில் தமிழகத்துக்கு அதிகமாக ரேபிட் பரிசோதனைக் கருவிகள வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் பேசும்போது கோரிக்கை வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சுமார் 7.30 மணி அளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

தமிழக முதல்வர் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து விளக்கமாகத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் அதிகமாக பரிசோதனை செய்ய வேண்டியுள்ளதால் எங்களுக்கு அதிகமாக ரேபிட் பரிசோதனைக் கருவிகள வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பிரதமர் மோடியும் முதல்வரின் கோரிக்கையை ஏற்று ரேபிட் பரிசோதனைக் கருவிகளை வழங்குவதாகத் தெரிவித்தார்'' என்று குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT