தமிழகம்

நாகர்கோவிலில் கரோனா பாதித்தோர் வசிக்கும் தடை செய்யப்பட்ட பகுதியில் உணவுப் பொருட்கள் விநியோகத்தில் குறைபாடு உள்ளதாகப் புகார்; முட்டை, காய்கறிகள் விநியோகிக்க மாநகராட்சி நடவடிக்கை

எல்.மோகன்

நாகர்கோவிலில் கரோனா பாதித்தோர் வசிக்கும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்கள கிடைக்கவில்லை என சமூக வலைதளங்களில் மக்கள் புகார் கூறியதைத் தொடர்ந்து முட்டை, காய்கறி, மற்றும் உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய மாநகராட்சியினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவினால் 16 பேர் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த நாகர்கோவில் டென்னிசன்ரோடு, வெள்ளடிச்சிவிளை, மணிகட்டிபொட்டல், தேங்காய்பட்டணம் ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டு அங்கு மக்கள் செல்வதற்கும், வீடுகளில் இருந்து வெளியே வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக போதிய உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. இந்நிலையில் வெள்ளடிச்சிவிளையைச் சேர்ந்த பெண் ஒருவர் வாட்ஸ் அப், மற்றும் சமூக வலைதளங்களில் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் பசியுடன் அவதி அடைவதாக பேசிய வீடியோ வைரலானது.

உணவுப் பொருட்கள் தங்களுக்கு சில நாட்களாக கிடைக்காததால் குழந்தைகளுடன் பசியுடன் வாடுகிறோம். மளிகைப் பொருட்கள் இல்லாவிட்டாலும் கஞ்சி காய்ச்சி குடிப்பதற்கு வெறும் அரிசியையாவது வழங்குங்கள். அல்லது ரேஷனில் இலவச அரிசியை வாங்க அனுமதியுங்கள். உணவுப் பொருட்கள் கிடைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுங்கள் என வாட்ஸ் அப்பில் அந்தப் பெண் பேசியிருந்தார்.

இதைத் தொடர்நது வெள்ளடிச்சிவிளை, டென்னிசன்ரோட்டில் கரோனாவினால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு உணவுப் பொருட்கள், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஏற்பாடு செய்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது உணவுப் பொருட்கள், மற்றும் முட்டை போன்றவை நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவை வாரத்திற்கு இரு முறை சுழற்சி முறையில் கடைகளில் வழங்கும் விலைக்கே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவின்றி தவிப்போருக்கு நாகர்கோவிலில் அம்மா உணவகம் மூலம் முட்டைகள் வழங்குவதற்காக ஒரு லட்சம் முட்டைகள் வாங்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT