மதுரையில் ஊரடங்கையொட்டி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இப்பொருட்களை வாங்குமிடங்களில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும். கடைக்காரர் களும் முகக்கவசம் அணிந்து பொறுப்புடன் செயல்படவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமையான இன்று இறைச்சி, மீன் கடைகளைத் திறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
இருப்பினும், இந்த உத்தரவை மீறி ஆரப்பாளையம், பெத்தானியாபுரம், கரிமேடு, புதூர், மூலக்கரை போன்ற இடங்களில் 15க்கும் மேற்பட்ட இறைச்சி, மீன்கடைகள் திறக்கப்பட்டதாக சுகாதாரத் துறைக்கு காலையில் தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரி விஜயகுமார் தலைமையில் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கடைகளுக்குச் சென்றனர். 15 கடைகள் மூலம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 385 கிலோ மட்டன், 225 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.