கமல்ஹாசனின் கோரிக்கையில் இருந்த “உண்மை சுட்டு விட்டதால்”தான் உடனடியாக மீனவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்திருக்கின்றார் என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் இன்று வெளியிட்ட அறிக்கை:
''விளிம்பு நிலையிலிருக்கும் மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் அண்மையில் பரவியிருக்கும் கரொனோ தொற்று மிகப்பெருமளவில் பாதித்திருக்கின்றது. இதுகுறித்த தனது நேர்மையான கேள்விகளை மக்களின் பக்கம் நின்று எங்கள் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றார்.
அவ்வகையில், மீன் இனவிருத்திக்காக அறுபது நாள் தடையை நமது மீனவர்களுக்கு விதித்துவிட்டு, பன்னாட்டு கப்பல்களில் மீன் பிடிக்க அனுமதித்தது ஏன்? அது எவ்வகை நீதி? என்கின்ற கமல்ஹாசனின் கேள்வி, ஆளும் அரசையும் மீன்வளத்துறை அமைச்சரையும் கலவரப்படுத்திவிட்டது.
நம்மவர் மீனவர்களுக்கு நீதி கேட்டு பதிவிட்ட பதிவு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை இன்று பதறி அடித்துக்கொண்டு வெளியில் வர வைத்திருக்கிறது.
ஏனெனில், இந்தப் பிரச்சினைக்குரிய தகவல், மீனவர்களை விட்டு வெளியில் வந்து விடாது என நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் குரலற்றவர்களின் குரலாக தொடர்ந்து ஒலிக்கும் நம்மவர் கமல்ஹாசன் மூலமாக வெளியே ஒலித்து விட்டதுதான் அமைச்சரின் பதற்றத்திற்கான காரணம்
இதுகுறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “மீனவர்களை தவறாக திசை திருப்புவதாக” அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.
மீனவர்கள் கடலில் எப்படி திசை தெரியாமல் இருக்கிறார்களோ அதேபோல் நிலத்திலும் திசையற்று போய்விடக்கூடாது என்பதாலும், மீனவர்களுக்கு நல்ல வழி காட்ட வேண்டும் என்கின்ற நல்ல நோக்கிலும்தான் நம்மவர் குரல் கொடுத்தார்.
“அது மட்டுமில்லாமல் நேரில் சென்று பார்த்தது போல் கமல்ஹாசன் பேசுகிறார்” என்று எப்பொழுதும் போல பொறுப்பற்ற தனமாகக் கேட்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். மீனவர்களின் வாழ்வாதாரம் புதைகுழியில் சென்று கொண்டிருக்கும் ஒரு சூழலை, மக்களுக்கு எடுத்துரைக்கும் ஜனநாயக குரலான நம்மவர் கமல்ஹாசனின் கேள்விக்கு மிகவும் பொறுப்பற்ற முறையில் பதிலளித்திருக்கின்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
மீனவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கடலுக்குள் பைபர் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற போது, பன்னாட்டுக் கப்பல்கள் மீன் பிடிப்பதைப் பார்த்து அதிர்ந்துவிட்டார்கள். மீன் இனவிருத்திக்கு தானே நம்மை அறுபது நாள் பொறுத்திருக்கச் சொன்னார்கள். இப்படி பன்னாட்டுக் கப்பல்கள் வந்து அள்ளிக்கொண்டு சென்றால் எப்படி மீன்கள் இனவிருத்தியாகும்? என்ற மீனவர்களின் குரல் தான் நம்மவரால் எழுப்பப்பட்டது.
இது கடலில் நடக்கும் செயல்தானே. யாரும் நேரில் சென்று பார்த்து விட முடியாது என்கிற தைரியமே அமைச்சரை இப்படி எள்ளலுடன் பேசவைத்திருக்கின்றது.
ஆனால் எந்த ஒரு நிலையிலும் மீனவர்களைக் குரலற்றவர்களாக நம்மவர் விட்டுவிடமாட்டார். நம்மவரின் நேர்மையான கேள்விக்குப் பின்னர், மீனவர்கள் கொந்தளித்துவிட கூடாது என்பதற்காக, இன்று வங்கிக் கணக்கில் 4.5 லட்சம் மீனவர்களுக்கு தலா 1000 ரூபாய் செலுத்துவதாகவும், அத்துடன் மீன்பிடி தடைக்காலத்தை குறைப்பது பற்றியும் ஆலோசிப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.
தலைவரின் கோரிக்கையில் இருந்த “உண்மை சுட்டு விட்டதால்” தான் உடனடியாக மீனவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக உறுதியளித்திருக்கின்றார்.
மக்களாட்சியில் மக்களிடம் மட்டுமே அதிகாரம் இருக்கும். ஆளும் அரசிடமோ அதன் அமைச்சர்களிடமோ இருக்காது என்கின்ற உயர்ந்த தத்துவத்தின் படி நடக்கும் எங்கள் தலைவரின் குரல், ஏழை எளியோர் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள் தாங்கள் மக்களின் பணியாளர்கள் மட்டுமே என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது''.
இவ்வாறு மகேந்திரன் தெரிவித்துள்ளார்.