பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

பிசிஆரும் இல்லை; ரேபிட் கிட் கருவிகளும் வரவில்லை; சிவகங்கை மாவட்டத்தில் பரிசோதனைகளை அதிகரிப்பதில் சிக்கல் 

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டத்தில் பிசிஆர் பரிசோதனை இல்லாத நிலையில், துரிதப் பரிசோதனைக் கருவிகளும் வராததால் பரிசோதனைகளை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் சிவகங்கை மாவட்டத்தில் 11 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேரும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் என 6 பேர் குணமடைந்தனர்.

மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதிகளைச் சேர்ந்தோர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடையவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனை மையம் இல்லாததால் சளி மாதிரிகள், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தும் சளி மாதிரிகள் மதுரைக்கு அனுப்பப்படுகின்றன.

அங்கு குறிப்பிட்ட அளவுக்கே பரிசோதனை செய்ய முடியும் என்பதால், முடிவுகள் தெரிவதற்கு ஒன்று முதல் 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் குறைந்த நபர்களுக்கே சளி மாதிரி எடுத்து அனுப்புகின்றனர். இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இம்மையம் சில நாட்களுக்குப் பிறகே செயல்பாட்டுக்கு வரும்.

பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், ரேபிட் கிட் மூலம் 30 நிமிடங்களில் முடிவுகளைத் தெரிந்து கொள்ள முடியும். இதையடுத்து, ரேபிட் கிட் மூலம் பரிசோதனைகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சீனாவில் இருந்து தமிழக அரசு முதற்கட்டமாக 24 ஆயிரம் ரேபிட் கிட் வாங்கியது. மத்திய அரசும் 12 ஆயிரம் துரிதப் பரிசோதனைக் கருவிகளை (ரேபிட் கிட்) தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.

அந்தக் கருவிகளை மாவட்ட வாரியாக அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை சிவகங்கை மாவட்டத்திற்கு வரவில்லை. ஏற்கெனவே பிசிஆர் பரிசோதனையும் இல்லாத நிலையில், ரேபிட் கிட் வராததால், சிவகங்கை மாவட்டத்தில் பரிசோதனைகளை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், "பிசிஆர் பரிசோதனை மையம் ஓரிரு நாளில் செயல்பாட்டுக்கு வரும். ரேபிட் கிட் முதற்கட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு வரவில்லை. அடுத்தடுத்து வர வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT