தமிழகம்

நாடு முழுவதும் மதுவிலக்கு வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு: கருணாநிதிக்கு ராமதாஸ் பதில்

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் மட்டுமல்ல நாடு முழுவதும் மதுவிலக்கு வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' ‘‘கொள்கைகளையும். நிலைப்பாட்டையும் அந்தந்த காலத்தின் தேவைக்கேற்பவும், கட்சியின் எதிர்காலம், மக்கள் நலன் கருதி மாற்றிக்கொள்வது மாபாதகம் அல்ல’’ என்ற வாதத்தை திமுக தலைவர் கருணாநிதி முன் வைத்துள்ளார்.

மக்கள் நலனுக்காக கொள்கைகளும், நிலைப்பாடுகளும் மாறலாம். மெட்ராஸ் மாகாண அரசின் நிலைப்பாட்டை மாற்றி 1948-ல் மதுக்கடைகளை அன்றைய முதல்வர் ஓமந்தூரார் மூடினார். இதுதான் வரவேற்கத்தக்க கொள்கை மாற்றம்.

புதுச்சேரியில் மதுவிலக்கு வேண்டும் என ராமதாஸ் பேசியிருக்கிறாரா? என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரியில் மட்டுமல்ல நாடு முழுவதும் மதுவிலக்கு வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு.

20-11-2010-ல் புதுச்சேரி பாமக தலைமை அலுவலக திறப்பு விழாவில் பேசும்போது, பாமக ஆட்சிக்கு வந்தால் கள், சாராயக் கடைகள் மூடப்படும் என அறிவித்தேன். 17-7-2012-ல் தமிழகம், புதுச்சேரியில் மதுக்கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம் நடத்தினோம்.

17-7-2014-ல் மக்களவையில் பேசும்போதும், 17-7-2015-ல் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்திலும் நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மதுவிலக்கு பிரச்சினையில் கருணாநிதியிடம் உண்மையில்லாததால் தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

1971-ல் மதுவிலக்கு ரத்து செய்யப்படுவதற்கு முன்பு மது அருந்த பெர்மிட் முறை இருந்ததாகவும், ஏழைகள் கள்ளச் சாராயம் குடித்ததாகவும் கருணாநிதி கூறியுள்ளார். இதன் மூலம் ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணா ஆகியோர் ஆட்சியில் கள்ளச் சாராயம் பெருக்கெடுத்து ஓடியதாக அவர் அவதூறு பரப்பியிருக்கிறார்.

தேர்தலுக்கு தேர்தல் பாமக கூட்டணி மாறியதாக கருணாநிதி குற்றம் சாட்டியிருக்கிறார். 1957 முதல் 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக அடித்த பல்டிகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.

மதுவிலக்கை கொண்டு வருவதாக 5 முறை அறிவித்து ஏமாற்றியதை அவர் மறைக்க முயல்கிறார். மதுவிலக்கை அமல்படுத்த கருணாநிதிக்கு விருப்பம் இல்லை. அப்படி விருப்பம் இருந்திருந்தால் கடந்த காலங்களில் முதல்வராக இருந்தபோது மதுவிலக்கை கொண்டு வந்திருப்பார். திமுகவினருக்கு மது ஆலைகள் நடத்த உரிமங்கள் வழங்கியிருக்க மாட்டார். விரைவில் தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கவே மதுவிலக்கு பற்றி கருணாநிதி பேசி வருகிறார்'' என ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT