நிதி நெருக்கடியில் புதுச்சேரி அரசு சிக்கித் தவிக்கும் நிலை யில், கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ.995 கோடி கேட்டும் இதுவரை எவ்வித நிதியும் மத்திய அரசு ஒதுக்கவில்லை.
கரோனா நிவாரணத்துக்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்தின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் மொத்தம் ரூ.11 ஆயிரத்து 92 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
ஆனால், எந்தளவுக்கு பாதிப்பு இருக்கிறது என்பதை கணக்கில்கொண்டு மாநிலங் களுக்கு நிதியை ஒதுக்காமல், மக்கள்தொகையை அடிப்படை யாகக் கொண்டு ஒதுக்கீடு செய்துள்ளதால் புதுச்சேரி சிக்கலில் உள்ளது.
இதுதொடர்பாக கேட்டபோது அரசு வட்டாரங்கள் கூறியது:
கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு முதலில் அமல் படுத்தப்பட்டபோதே இடைக்கால நிதியாக ரூ.200 கோடியை புதுச்சேரி கேட்டும், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.
இதையடுத்து ரூ.995 கோடியை ஒதுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதினார். தொடர்ந்து பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் தொலைபேசியிலும் வலியுறுத் தினார். இதுதவிர, மருத்துவ சாதனங்களை கோரியும், அதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
கடந்த நிதியாண்டில் ரூ.570 கோடி வரை வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சரக்கு சேவை வரி இழப்பீடு கிடைக்காதது, கலால் மற்றும் பத்திரப்பதிவு இலக்கை எட்டாதது ஆகியவையும் இதற்கு காரணம். தற்போதும் மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால் அன்றாட அரசை நடத்துவதற்கே திணறும் நிலை ஏற்படும். அனைத்து துறைகளும் செயலிழக்கக்கூடிய அபாயம் உள்ளது என்று தெரிவித்தனர்.
புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கூறியது: கரோனா தடுப்பு களப்பணிகளை நேரடியாக ஆய்வு செய்யாமல் ஆளுநர் கிரண்பேடி ராஜ்நிவாஸிலேயே உள்ளார். மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் விரைந்து கிடைப்பதற்காகவாவது அவர் நடவடிக்கை எடுக்கலாம். மாநில நிதி நெருக்கடி குறித்து மத்திய அரசிடம் ஆளுநர் கிரண்பேடி எடுத்துக்கூறாமல் இருப்பது தவறானது என்று தெரிவித்தனர்.