ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த நபர்களிடம் இருந்து தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 6 லட்சத்து 74 ஆயிரத்து 294 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி சாலைகளில் அவசியமின்றி சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 24 நாட்களில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்ததாக 2 லட்சத்து 28 ஆயிரத்து 823 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் காவல் நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 2 லட்சத்து 14 ஆயிரத்து 951 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1 லட்சத்து 94 ஆயிரத்து 339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 74 ஆயிரத்து 294 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பொதுமக்களிடம் திருப்பிக் கொடுக்கும் பணியும் தொடங்கி உள்ளது. ஒரே நேரத்தில் அனைவரும் வருவதைத் தவிர்க்க, வரவேண்டிய நாள் குறித்து வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் பின்னரே அவர்கள் வரவேண்டும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.