தூத்துக்குடி நகருக்குள் புகுந்த புள்ளிமானை நாய்கள் துரத்தியதால் சுவரில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் இன்று காலை புள்ளிமான் ஒன்று தெருவில் சுற்றித் திரிந்தது.
இதனைக்க் கண்ட தெரு நாய்கள் மானை துரத்தியுள்ளன. இதனால் பயந்து ஓடிய மான், அந்தப் பகுதியில் உள்ள சுவர் ஒன்றை தாண்டி குதிக்க முயன்றுள்ளது. அப்போது மான் சுவரில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது.
தகவல் அறிந்ததும் வனச்சரகர் மகேஷ் தலைமையிலான வனத்துறையினர் அங்கு வந்து மானின் சடலத்தை மீட்டனர்.
அந்த மான் ஒரு வயதுடைய ஆண் புள்ளி மான் ஆகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு முதல் ஓட்டப்பிடாரம் வரையிலான காட்டுப் பகுதியில் புள்ளி மான்கள் உள்ளன. தற்போது ஊரடங்கு உத்தரவால் சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாததால் மான்கள் சாலைகளில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.
அவ்வாறு சுற்றித் திரிந்த இந்த மான் நேற்று முன்தினம் இரவு நகருக்குள் வந்திருக்கலாம். காலையில் நாய்கள் துரத்தியதால் சுவரில் மோதி உயிரிழந்துள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மான் சடலத்தை கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை செய்த பிறகு வனப்பகுதியில் புதைத்தனர். தூத்துக்குடி நகரின் மையப்பகுதிக்குள் புள்ளிமான் வந்தது மக்களை ஆச்சரியப்படுத்தியது.