கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து, நிவாரணப் பொருட்களைக் கொடுத்ததுடன் அவர்களுக்கு அசைவ விருந்தும் கொடுத்து திக்குமுக்காட வைத்தனர் அப்பகுதி திமுகவினர்.
கிள்ளை பேரூராட்சியில் பணியாற்றும், நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் இன்று மதியம் பணி முடிந்ததும் வரவழைத்து தனிமனித விலகலுடன் வரிசையாக நிற்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து கிள்ளை பேரூர் திமுக செயலாளரும் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும் ‘நிலம்’ அறக்கட்டளையின் தலைவருமான வழக்கறிஞர் கிள்ளை ரவிந்திரன் தலைமையில் ஒன்றியச் செயலாளர் கலையரசன் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் பலரும் தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி, சந்தனம், குங்குமம், வைத்து பாதமலர் தூவி, அவர்களுக்கு மாலைகள் அணிவித்தனர்.
பிறகு, “நகரை தூய்மைப்படுத்தும் உங்களையும், இந்த கரோனா தொற்று நேரத்தில் கால நேரம் பார்க்காமல் பணியாற்றும் காவல்துறையினர், மருத்துவர்கள், உள்ளிட்டவர்களையும் நன்றி உணர்வோடு நினைத்துப் பார்ப்போம். எங்கள் பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் உங்களுக்கு நாங்கள் என்றைக்கும் பக்க பலமாகவும், சமூகத்தில் உங்களை சமமாக மதித்து, உரிய அந்தஸ்தையும், கவுரவத்தையும் எப்போதும் வழங்குவோம். உங்களின் குடும்பம் உயர, பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற உறுதுணையாக உங்களுக்கு இருப்போம்" என்று அங்கிருந்த அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதன் பின்னர் அவர்கள் அனைவரையும் தனிமனித விலகலுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்று அமரவைத்து, அசைவ உணவு பரிமாறப்பட்டது. இறுதியில், அவர்கள் சாப்பிட்ட இலையையும்கூட கிள்ளை ரவிந்திரன் உள்ளிட்டவர்களே எடுத்தனர்.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அரிசி, மளிகை, காய்கறி, உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டன.