மதுரையில் ஊரடங்கால் உணவின்றி தவித்த இறையியல் கல்லூரியில் பயிலும் வட கிழக்கு மாநில மாணவ, மாணவிகளுக்கு இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மதுரை அரசரடியில் உள்ளது இறையியல் கல்லூரி. இங்கு மணிப்பூர், சிக்கிம், திரிபுரா, மற்றும் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 10 மாணவிகள் மற்றும் 14 மாணவர்கள் படித்து வருகின்றார்கள்.
ஊரடங்கு உத்தரவால் இவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் உள்ளது. இதனால் பசியால் வாடும் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மாணவிகள் மணிப்பூர் மாநில உயர் நீதிமன்றம் சட்டப் பணிகள் ஆணைக் குழுவிற்கு கோரிக்கை அனுப்பினார்.
இந்த கோிக்கையை மணிப்பூர் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சென்னை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்தது.
இதையடுத்து மாணவிகளை நேரில் சந்தித்து தேவையான உதவியை வழங்க மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி நசீமாபானு கோட்டுக்கொள்ளப்பட்டார்.
முதன்மை நீதிபதியின் உத்தரவின் பேரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான வி.தீபா, செஞ்சிலுவை சங்க செயலர் கோபாலகிருஷ்ணன். வழக்கறிஞர் முத்துக்குமார் ஆகியோர் அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகை பொருட்கள், மாஸ்க் மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை வட கிழக்கு மாநில மாணவ, மாணவிகளிடம் இன்று வழங்கினர்.
மாணவ, மாணவிகளுக்கு தேவையான உணவு பொருட்களை மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் வழங்கினர்.