தமிழகம்

மதுரையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: மக்கள் வெளியில் வராமல் இருக்குமாறு அறிவுரை

என்.சன்னாசி

மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக அமைச்சர் கூறியது:

மாவட்டத்தில் 44 பேருக்கு கரோனா தொற்று கண்டறியந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 15 பேர் முழு குணமடைந்துள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு அறை செயல்படு கிறது. இதுவரை 2,199 கோரிக்கை அழைப்புகள் பெறப்பட்டு, தீர்க்கப்பட்டுள்ளன.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக மதுரையில் 2,337 மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு, தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் 1,068 வரு வாய் துறையினர், 5, 286 ஊரக வளர்ச்சித்துறையினர், சுகாதாரத் துறையில் இருந்து,1499 பேர், நகராட்சியைச் சேர்ந்த 650, பேரூ ராட்சியைச் சேர்ந்த 588 மாநகராட்சியைச் சேர்ந்த 6,153 நபர்கள் 2,600 காவல்துறையினர் என, பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் கரோனா தடுப்பு களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தியவாசியப் பொருட்கள் தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரம், பதுக்கல், விலை ஏற்றம் தடுப்பது உள்ளிட்டவைகளை கண் காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 772 தெருக்களில் மின்கல தெளிப்பானில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மக்களுக்கு எளிதில் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் கிடைக்க,ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் 4,679 வெளிமாநில தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. நடன, நாட்டுப்புற கலைஞர்களுக்கும் உணவுப் பொருட்கள் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

மாவட்டத்தில் அரிசி பெறும் 8, 56,102 அட்டைதாரர்களில் இது வரை 8,40,012 பேருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியோருக்கு வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக மதுரை ஆட்சியரிடம் ஏப்., 17 முதல் ரூ.1,03,19,967 வழங்கப்பட்டு, பொதுநிவாரண நிதியில் சேர்க்கப் பட்டுள்ளது. இது போன்ற கரோனா தடுப்பு குறித்த பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் விதிகளின்படி பொது மக்கள் வெளியே வராமல் சமூக விலகலைப் பின்பற்றி ஒத்துழைக்கவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு வாகன விழிப்புணர்வு பிரசாரத்தை வாடிப்பட்டியில் அமைச்சர் தொடங்கி வைத்தார். ஆட்சியர் டிஜி.வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT