கரோனா சிகிச்சையில் மருத்துவர்கள் அணியும் பிபி-கவச உடை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது இதை தேசிய விண்வெளி ஆய்வுக்கழகம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தினம் 30 ஆயிரம் கவச உடை தயாரிக்க முடியும்.
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக போராடி வரும் சிகிச்சைக்கு சவாலாக இருப்பது நோயைக் கண்டறியும் கருவிகள், மருத்துவர்கள் அணியும் பாதுகாப்பு கவச உடை போன்றவைகளின் பற்றாக்குறையே. இதனால் பல மருத்துவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இந்நிலையில்சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கவச உடையில் 60 ஆயிரம் கவச உடைகள் தரமற்றதாக இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிலேயே கவச உடை தயாரிப்பில் ஒரு புரட்சி நிகழ்ந்துள்ளது. தேசிய விண்வெளி ஆய்வகம் மருத்துவர்களுக்கான பிபி பாதுகாப்பு கவச உடையை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்த விபரம் வருமாறு:
பெங்களூருவில் உள்ள CSIR ஆய்வகத்தின் ஒரு பகுதியான, தேசிய விண்வெளி ஆய்வகம் (CSIR-NAL), MAF ஆடை நிறுவனத்துடன் இணைந்து, முழு பாதுகாப்பு கவச உடையை உருவாக்கி சான்றளித்துள்ளது.
கொவிட்-19 காரணமாக இரவு பகலாக பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பல அடுக்கு பாலிப்ரொப்பிலீன் (Polypropylene-PP) துணி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த கவச உடையைப் பயன்படுத்தலாம்.
CSIR-NAL குழுவின் தலைவர் டாக்டர் ஹரிஷ் சி பார்ஷிலியா, டாக்டர் ஹேமந்த் குமார் சுக்லா, மற்றும் MAF இன் . எம். ஜே விஜு ஆகியோர் உள்நாட்டு பொருட்கள் மற்றும் புதுமையான உற்பத்தி செயல்முறைகள் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண விரைவாக பணியாற்றியுள்ளனர்.
இந்த கவச உடைகள் கோயம்புத்தூரில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தில் (SITRA) கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பயன்பாட்டிற்கு தகுதி பெற்றன. CSIR-NAL மற்றும் MAFம், நான்கு வார காலத்திற்குள் உற்பத்தி திறனை ஒரு நாளைக்கு சுமார் 30,000 உடைகளாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளன.