தமிழகம்

வங்கிகள், பெரிய கடைகள் மூலம் மெட்ரோ ரயில் பயண அட்டைகள் எளிதில் கிடைக்க வசதி: செல்போன் மூலம் டிக்கெட் பெறவும் ஏற்பாடு

கி.ஜெயப்பிரகாஷ்

மெட்ரோ ரயில் பயண அட்டைகளை வங்கிகள் மற்றும் பெரிய கடைகளிலும் மக்கள் எளிமையாக பெறும் வகையில் புதிய வசதிகளை கொண்டு வர மெட்ரோ ரயில்வே நிறுவனம் வங்கிகள் மற்றும் பெரிய கடைகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது.

சென்னையில் ஆலந்தூர் கோயம்பேடு இடையே கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. முதல் வாரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பின்னர், அலுவலக நாட்களை தவிர, விடுமுறை நாட்களில் மட்டுமே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தற்போது, விடுமுறை நாட்களில் செல்லும் மக்கள் கூட்டமும் கணிசமாக குறைந்து வருகிறது.

கட்டணம் அதிகமாக இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அனைவரும் பயன்படுத்தும் வகையில் கட்டணத்தை குறைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் தற்போது சுமார் 10 கி.மீ. தூரத்துக்குதான் (ஆலந்தூர் கோயம்பேடு) மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் சராசரியாக தினமும் 10 ஆயிரம் பேர்தான் பயணம் செய்வார்கள் என திட்டமிட்டோம். ஆனால், தினமும் சுமார் 20 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். இதுவே விடுமுறை நாட்களில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையில் பயணம் செய்கின்றனர்.

தற்போது பணிகள் நடந்து வரும் வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கினால், பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம்.

இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் முழுமையாக ஓடத் தொடங்கும்போது, மெட்ரோ ரயில் பயண அட்டைகள் தேவை மேலும் அதிகமாகி விடும். எனவே மக்களுக்கு மெட்ரோ ரயில் பயண அட்டைகள் எளிமையாக கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளோம். இதற்காக தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள், பெரிய கடைகள் என பணிகளை பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் மேற்கொள்பவர்களை தேர்வுசெய்து அவர்கள் மூலம் பயண அட்டைகளை விநியோகம் செய்யவுள்ளோம். இதற்கான ஆய்வுகளையும், ஆலோசனையும் நடத்தவுள்ளோம்.

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் பயண அட்டை கிடைக்க ஏற்பாடுகளை செய்யவுள் ளோம். செல்போன் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்களை பெறுவது தொடர்பாகவும் செல்போன் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகி றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT