வாட்ஸ்அப் மற்றும் முகநூல் வழியாக தெரிய வந்த தகவலை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக விரைந்து சென்று வறுமை மற்றும் நோயால் வாடிய குடும்பத்துக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்திருக்கிறார் வேதாரண்யம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சபிபுல்லா.
வேதாரண்யம் அருகேயுள்ள துளசியாப்பட்டினம் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் இருக்கின்றனர். அவர்களின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள். ஊரடங்கால் அவர்களுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் வருமானம் கிடைக்காமல் உணவுக்கும் வழியில்லாமல் வாடினார்கள். போலியாவால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கும் வழியில்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியது இந்தக் குடும்பம்.
இந்தத் தகவல் அப்பகுதி சமூக ஆர்வலர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதைக் கவனித்த வேதாரண்யம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சபிபுல்லா உடனடியாக விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்தார். போலியோவால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியதோடு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான எற்பாடுகளையும் செய்தார்.
அத்துடன், அந்தக் குடும்பத்துக்குத் தேவையான அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், மற்றும் கைச்செலவுக்குத் தேவையான பணம் ஆகியவற்றையும், முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்டவைகளையும் வழங்கி ஆறுதல் கூறினார் சபியுல்லா.
காவல் துணைக் கண்காணிப்பாளர் சபிபுல்லா காலத்தே மேற்கொண்ட இந்த மனிதநேயம்மிக்க நடவடிக்கையை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.