விருதுநகர் மாவட்டம் வீ.கரி சல்குளம், பூம்பிடாகை, திரு வளநல்லூர், எஸ்.நாங்கூர் ஆகிய பகுதிகளில் திருச்சுழியைச் சேர்ந்த ஆற்றல் பெண்கள் கூட்டமைப்பினர் 2000-ம் ஆண்டு முதல் ரேஷன் கடைகள் நடத்தி வந்தனர்.
இக்கடைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி ஆட்சியர் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் நேற்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.ஆயிரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. நீதிமன்றத் தடையால் வீ. கரிசல்குளம், பூம்பிடாகை, திருவளநல்லூர், எஸ். நாங்கூர் ஆகிய கிராம மக்களுக்கு நிவாரண நிதி மற்றும் இலவச பொருட்கள் வழங்க முடியவில்லை. எனவே தடையை விலக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி தண் டபாணி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று விசாரித்தார். கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் வாதிட்டார்.
விசாரணைக்குப் பிறகு ரேஷன் கடைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றி விருதுநகர் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கியும், நான்கு கிராமத்திலும் மக்களின் வீடுகளுக்கே சென்று நிவாரண நிதி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.