தமிழகம்

கோடம்பாக்கத்தில் பால்கனி இடிந்து விழுந்து 3 சிறுவர்கள் படுகாயம்

செய்திப்பிரிவு

சென்னை கோடம்பாக்கம் புலியூர் ஹவுசிங் போர்டில் பால்கனி சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகே சிவன் கோயில் தெற்கு தெருவில் புலியூர் ஹவுசிங் போர்டு உள்ளது. இங்கு மொத்தம் 428 வீடுகள் உள்ளன. அனைத்தும் 20 ஆண்டுகளுக்கும் மேலான பழைய குடியிருப்புகள் ஆகும்.

இன்று மாலை E1 பிளாக்கில் வசிக்கும் சிறுவர்கள் கவிராயன் (9), பவித்ரன் (6), இவர்களின் பக்கத்து வீட்டு நண்பன் ஜீவா (13) ஆகிய மூவரும் ஒன்றாக 3-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பால்கனி சுவர் விரிசல் விட்ட நிலையில் திடீரென உடைந்து கீழே விழுந்தது. இதில் மூன்று மாடி பால்கனிகளும் ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்தன. இதனால் மூன்றாவது மாடி பால்கனியில் இருந்த சிறுவர்கள் இடிபாடுகளுடன் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

பால்கனி இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கமிருந்தவர்கள் ஓடிவந்து இடிபாடுகளை அகற்றி சிறுவர்களை மீட்டனர். இதில் மூன்று சிறுவர்களும் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் இரண்டு சிறுவர்களுக்கும் உடம்பில் காயங்களும் ஒரு சிறுவனுக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவலறிந்து வந்த தி.நகர் துணை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கரோனா ஊரடங்கில் அனைவரும் வீடடங்கி இருந்தால் வீடு பாதுகாப்பானதாக இல்லை. நீண்டகால அரசு குடியிருப்புகள், குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளில் பாதிக்கப்பட்ட இடங்களை மராமத்து பார்த்து சரி செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நந்தனம் குடியிருப்பில் பால்கனி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT