தமிழகம்

நிலக்கரி இறக்குமதியில் தூத்துக்குடி வஉசி துறைமுகம்  புதிய சாதனை

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி வஉசி துறைமுகம் 24 மணி நேரத்தில் 55,105 மெட்ரிக் டன் நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

துறைமுகத்தின் சரக்கு தளம் -9-ல் எம்.வி. தியோடர் ஓல்டென்டோர்ப் என்ற கப்பலில் இருந்து இந்த நிலக்கரி இறக்கப்பட்டது.

இது முந்தைய 24 மணி நேர சாதனையான 54,020 மெட்ரிக் டன் நிலக்கரியை விட அதிகமாகும். இந்த கப்பல் இந்தோனேஷியாவில் இருந்து 73,507 டன் நிலக்கரியுடன் தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்தது.

இங்குள்ள அதிநவீன மூன்று நகரும் பளுதூக்கி இயந்திரங்கள் மூலம் நிலக்கரி வேகமாக இறக்கப்பட்டன. இதில் 24 மணி நேரத்தில் மட்டும் 55,105 மெட்ரிக் டன் நிலக்கரி இறக்கப்பட்டது.

கரோனா தொற்று உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த வேளையில், வஉசி துறைமுகம் அரசால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து ஆணைகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி இந்த சாதனையை படைத்துள்ளதாக துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT