தமிழகம்

மேற்குதொடர்ச்சி மலையில் காட்டுத் தீ:  3 ஹெக்டேர் பரப்பளவில் சேதம்

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மின்னல் தாக்கி காட்டுத் தீ ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் 20-க்கும் மேற்பட்ட வன களப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று மாலை திடீர் இடி, மின்னல் ஏற்பட்டது. அப்போது
பேய்மலை மொட்டை என்ற பகுதியில் திடீரென தீ பற்றியது.

அதையடுத்து காட்டு தீ வேகமாக பரவியது. இதைக்கண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் வன களப்பணியாளர்கள் மற்றும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த 20 பேர் வனப்பகுதிக்கு நேற்று மாலை புறப்பட்டனர்.

நள்ளிரவில் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற இவர்கள் காட்டுத் தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தீ பரவி வருவதால் வனத் துறையினர் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தபோது மின்னல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் உடனடியாக 20 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தற்போது சுமார் 3 ஹெக்டேர் பரப்பளவில் தீ விபத்தால் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் காட்டு தீ கட்டுக்குள் கொண்டுவர பட்டுள்ளதாகவும் மாலைக்குள் முழுமையாக தீ அணைக்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT