தமிழகம்

தென்காசியில் கரோனா சமூகப் பரவலாக மாறவில்லை: சிறப்பு அலுவலர் கருணாகரன் தகவல்

த.அசோக் குமார்

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று சமூகப் பரவல் ஆகவில்லை என்று கரோனா தடுப்புப் பணிகள் மண்டல சிறப்பு அலுவலர் கருணாகரன் கூறினார்.

தென்காசி மாவட்டம் நன்நகரம், புளியங்குடி ஆகிய பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகளை மண்டல சிறப்பு அலுவலரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநருமான எம்.கருணாகரன் இன்று ஆய்வு செயத்ர்.

பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் அருண் சுந்தா் தயாளன் தலைமை வகித்தார்.

கூட்டத்துக்கு பின்னர், சிறப்பு அலுவலர் கருணாகரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தென்காசி மாவட்டத்தில் நன்னகரம், புளியங்குடி ஆகிய பகுதிகள் கரோனா பாதிப்பில் ஹாட் ஸ்பாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எந்தெந்த பகுதிகளில் கரோனா தொற்று ஏற்பட்டள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் விரைவாக கண்டுபிடித்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 70 ஆயிரத்து 423 குடும்பங்களில், 2 லட்சத்து 42 ஆயிரத்து 800 பேர் சர்வே செய்யப்பட்டு, காய்ச்சல் சோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 2,317 பேர் தனிமைப்படுத்தப்பட்டதில், 2,034 பேருக்கு 28 நாட்கள் வீட்டுத் தனிமை முடிந்துள்ளது. 283 பேருக்கு விரைவில் 28 நாட்கள் வீட்டுத்தனிமை முடிந்துவிடும்.

ஊரடங்கு காலத்தில் அரசு வழங்கிய 1000 ரூபாய் நிவாரணம் தென்காசி 98 சதவீத குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 4,30,361 குடும்ப அட்டைகளில் 4,23,818 குடும்ப அட்டைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்யம் தொழிலாளர்கள் 43 பேர் 5 இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்தந்த தொழிற்சலைகள், வியாபார நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அந்தந்த நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளன.

காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. 20-ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்கம். அந்த காலத்திலும் தனித்திருத்தல், முகக் கவசம் அணிதல் ஆகியவற்றை பொதுமக்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

புளியங்குடியில் கரோனா பாதிப்பு உள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டு உள்ளது. அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து, பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள மக்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தன்னார்வலர்கள் உதவியுடன் பாதுகாப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று சமூகப் பரவல் இதுவரை இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இருப்பினும் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்த்து, தனிமைப்படுத்தி இருப்பதை உறுதி செய்துகோள்ள வேண்டும்.

தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், புளியங்குடி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 443 படுக்கைகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க வசதியாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, யாருக்காவது நோய் அறிகுறி உள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

இப்போதைக்கு நோயாளிகள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகின்றனர். தென்காசி அரசு மருத்துவமனையில் 5 வென்டிலேட்டர் வசதி உள்ளது” என்றார்.

ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கூறும்போது, “கரோனா சிகிச்சைக்காக தென்காசி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்க சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

2 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், படுக்கை வசதி இல்லாத இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், 4 ஆயிரம் படுக்கைகள் அமைக்க வசதி உள்ளது. தேவைப்பட்டால் அங்கும் படுக்கை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT