தமிழகம்

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு மேலாண்மை இயக்குனர் நியமிக்க எதிர்ப்பு: ஏப். 20-ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட பணியாளர்கள் முடிவு

கி.மகாராஜன்

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு மேலாண்மை இயக்குனர் நியமனம் செய்யும் முடிவை கைவிடக்கோரி ஏப். 20-ல் மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த சங்கத்தின் மாநில கெளரவ பொதுச் செயலர் சி.குப்புசாமி, மாநில பொதுச் செயலர் பி.காமராஜ் பாண்டியன், மதுரை மாவட்ட செயலர் ஆ.ம.ஆசிரியதேவன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் துணைப் பதிவாளர்/ கூட்டுறவு சார்பதிவாளர் பணி நிலையில் அரசு ஊழியரை மேலாண்மை இயக்குனராக நியமிக்க மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை செயல்படுத்தினால் கூட்டுறவு சங்கங்களின் நிதி நிலைமை பாதிக்கப்படும்.

மேலாண்மை இயக்குனருக்கு சம்பளம் மற்றும் பயணப்படி உள்ளிட்ட அனைத்தையும் கூட்டுறவு சங்கங்களே வழங்கவேண்டும். ஏற்கனவே கூட்டுறவு சங்கங்களின் நிதி நிலைமை சரியாக இல்லை. பல சங்கங்கள் பணியாளர்களுக்கே சம்பளம் வழங்க முடியாதவாறு நஷ்டத்தில் இயங்குகின்றன.

இந்நிலையில் அரசு ஊழியரை மேலாண்மை இயக்குனராக நியமித்தால் சங்கங்களின் நிதி நிலைமை மேலும் மோசடையும். தற்போது கூட்டுறவு சங்கங்கள் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழுக்களால் நிர்வகிக்கப்படுகின்றன. மேலாண்மை இயக்குனர் நியமனம் செய்தால் நிர்வாக்குழுவின் ஜனநாயக உரிமை பறிபோகும்.

இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு மேலாண்மை இயக்குனர் நியமனம் செய்வது தொடர்பான கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஏப். 20-ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள், ரேசன் கடை பணியாளர்கள் பங்கேற்பர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT