சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே டேங்கரில் நீரை விலைக்கு வாங்கி 2,000 மரக்கன்றுகளை ஊராட்சித் தலைவர் ஒருவர் காப்பாற்றி வருகிறார்.
காளையார்கோவில் அருகே மாரந்தை ஊராட்சி தெற்கு மாரந்தை, தளிர்தலை, மேட்டுக்குடியிருப்பு, வடக்கு மாரந்தை, கோளாந்தி, கூத்தனி, கோரவலசை, மூலக்கரை, கீழச்சேத்தூர், மேலச்சேத்தூர் ஆகிய கிராமங்களில் நூறு நாள் வேலைத் திட்டம் மூலம் 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும் அத்திட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வந்தனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நூறு நாள் வேலைத் திட்டம் முடக்கப்பட்டது. இதனால் மாரந்தை ஊராட்சியில் நடப்பட்ட மரக்கன்றுகள் தண்ணீரின்றி கருகி வந்தன.
இதையடுத்து ஊராட்சித் தலைவர் திருவாசகம் 2,000 மரக்கன்றுகளுக்கும் தண்ணீர் ஊற்றி வருகிறார். மேலும் மாரந்தை ஊராட்சியில் நீர்நிலைகளிலும் தண்ணீர் வற்றியதால், டேங்கரில் நீரை விலைக்கு வாங்குகிறார்.
ஒரு டேங்கர் ரூ.900 வீதம் வாங்கி வாரம் இருமுறை மரக்கன்றுகளுக்கு ஊற்றி வருகிறார். அவரது செயலை கிராமமக்கள் பாராட்டி வருகின்றனர்.